ETV Bharat / state

ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 சவரன் நகைகளை வீசி சென்ற இளம்பெண்.. அதிர்ந்த பெற்றோர்...

author img

By

Published : Jul 5, 2022, 4:04 PM IST

43 சவரன் நகையை ஏடிஎம் குப்பை தொட்டியில் வீசிய இளம்பெண்.. அதிர்ந்த பெற்றோர் - நடந்தது என்ன?
43 சவரன் நகையை ஏடிஎம் குப்பை தொட்டியில் வீசிய இளம்பெண்.. அதிர்ந்த பெற்றோர் - நடந்தது என்ன?

குன்றத்தூரில் பெண் ஒருவர், தனியார் வங்கி ஏடிஎம் குப்பைத்தொட்டியில் 43 சவரன் நகைகளை போட்டுச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குன்றத்தூர் முருகன் கோயில் செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான வங்கி மற்றும் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கோதண்டம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று (ஜூலை 4) காலை ஏடிஎம் மையத்திற்குள் சென்ற கோதண்டம், அங்கிருந்த குப்பைத்தொட்டியில் கைப்பை ஒன்று இருப்பதை பார்த்துள்ளார்.

பின்னர் அதனை பிரித்து பார்த்தவர், அதில் நகைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், அங்கு சென்ற குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான காவல்துறையினர், நகை இருந்த பையை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

நகை வந்தது எப்படி? அதேநேரம், ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 35 வயதுடைய பெண் ஒருவர், ஏடிஎம் மையத்திற்குள் சென்று கதவை திறந்து குப்பைத்தொட்டியில் நகைப்பையை போட்டு விட்டு செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அப்பெண் யார் என்று காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், குன்றத்தூரில் தனது மகளை காணவில்லை என்று அவரது பெற்றோர் வாய்மொழியாக காவல்துறையினருக்கு தெரிவித்திருந்தனர்.

பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நகைப்பை
பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நகைப்பை

ஆனால், காணாமல் போன அப்பெண், வீட்டிற்கு வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை அந்த பெண்ணின் பெற்றோரிடம் காண்பித்துள்ளனர். அப்போது அந்த காட்சியில் இருப்பது தனது மகள் என அவர்கள் தெரிவித்தனர்.

காரணம் என்ன? தொடர்ந்து, 43 சவரன் நகைகளை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு சென்றது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் வங்கி ஊழியர்களை அழைத்து, நகைகளை ஒப்படைக்கும் பணியில் குன்றத்தூர் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் நகைகளை ஏடிஎம் குப்பைத்தொட்டியில் போட்டுச் சென்ற பெண், சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், தூக்கத்தில் எழுந்து நடந்து வரும்போது வீட்டில் இருந்த நகையை பையில் போட்டு எடுத்து வந்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டுச் சென்றதும் தெரிய வந்தது. மேலும், உரிய நேரத்தில் நகைப்பையை மீட்டு கொடுத்த வங்கி காவலாளி கோதண்டத்தை காவல்துறையினர் உள்பட பலரும் பாராட்டினர்.

இதையும் படிங்க: கார் டெலிவரி தாமதம் - இளைஞர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.