ETV Bharat / state

"பாஜக நிர்வாகிகளை அண்ணாமலை கண்டித்து வைக்க வேண்டும்" - ஜெயக்குமார் காட்டம்!

author img

By

Published : Apr 28, 2023, 9:37 PM IST

பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அதிமுகவை குறித்து விமர்சித்ததற்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணாமலை தனது நிர்வாகிகளை கண்டித்து வைக்க வேண்டும் என்றும், இதுபோன்ற விமர்சனங்களை தாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம் என்றும் தெரிவித்தார்.

cannot
பாஜக

சென்னை: சென்னை ராயபுரத்தில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று(ஏப்.28) நடைபெற்றது. இக்கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தமிழகத்தில் மினி எமர்ஜென்சி செயல்படுத்தப்படுகிறது. அதாவது, பேச்சுரிமை இல்லை, கருத்து சுதந்திரம் இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்கேடாக உள்ளது.

தற்போது, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ஒரு வாரத்திலேயே 10 கொலைகள் நடந்துள்ளன. விசிக பிரமுகர்கள் இரண்டு பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்கள். பாஜகவைச் சேர்ந்தவர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் எந்த அளவுக்கு மணல் மாஃபியாக்கள் கொடிகட்டி பறக்கிறார்கள் என்பதற்கு விஏஓ படுகொலையே சான்று. இப்படி, தமிழகத்தில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது.

தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. ஊடகத்திற்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. ஜி-ஸ்கொயர் நிறுவன ரெய்டு சம்பந்தமான செய்தி சேகரிக்கச் சென்றவர் அடி வாங்கியுள்ளார். ஜனநாயகத்தில் நான்காவது தூணாக இருக்கின்ற பத்திரிகையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை. அதுமட்டுமல்லாமல் எங்கும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. உலகத்திலேயே ஊழலால் கலைக்கப்பட்ட ஆட்சி என்றால் அது திமுகதான். அப்படி ஊழலை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி, ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி, கீழ் முதல் மேல் வரை ஊழல் செய்து, கோடிக்கணக்கான பணத்தை வைத்துள்ளார்கள்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ விவகாரம் குறித்து மத்திய அரசிடம் நாங்கள் வலியுறுத்தி உள்ளோம். இவை அனைத்தையும் சிபிஐ எடுத்து விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் 15 அமைச்சர்கள் துறை வாரியாக ஊழல் செய்துள்ளார்கள்.

அதேபோல், மின்வாரியத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான முழு விவரங்களை மத்திய அரசிடம் வழங்கியிருக்கிறோம் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்கள்" என்று கூறினார்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் நிறுத்திய விவகாரம் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாதியில் நிறுத்தியது மிகவும் தவறான ஒன்றாகும். இதை நான் அண்ணாமலைக்காக மட்டும் சொல்லவில்லை, இதனை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்" என்று கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் நடத்திய மாநாடு குறித்த கேள்விக்கு, "ஓபிஎஸ் அதிமுகவினரை தொடர்ந்து விமர்சிப்பது ஒரு நாகரிகமற்ற செயல். திருச்சியில் அவர் நடத்தியது மாநாடு இல்லை. அது ஒரு பொதுக்கூட்டம். 50 கோடி ரூபாய் செலவு செய்து ஆள்பிடித்து கூட்டிய கூட்டத்தை வைத்துக் கொண்டு பொதுக்கூட்டம் நடத்தி, தங்களைப் பற்றி அவன்- இவன் என்று விரக்தியில் பேசிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

அதிமுகவுக்கு வசீகரமும், சரியான தலைமையும் தற்போது இல்லை என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்தது குறித்து பேசிய ஜெயக்குமார், "அண்ணாமலை தனது நிர்வாகிகளைக் கண்டித்து வைக்க வேண்டும். அவர்கள் ஒரு வினை ஆற்றினால் நாங்கள் எதிர்வினை ஆற்றத் தயார். தோழமைக் கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் சந்தித்து பேசிய பிறகும் இதுபோன்ற விமர்சனங்களை வைத்தால், நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி உறுதி.. என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.