ETV Bharat / state

தமிழை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு - வைகோ குற்றச்சாட்டு

author img

By

Published : Aug 3, 2021, 11:23 AM IST

சமஸ்கிருதத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட, தமிழுக்கு கொடுக்காமல் ஒன்றிய அரசு வஞ்சிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

வைகோ
வைகோ

உலகளவில் உள்ள கல்வெட்டுகளில் 75 விழுக்காட்டிற்கும் மேலான கல்வெட்டுகள் தென்னிந்தியாவில் மட்டுமே உள்ளன. இந்தியாவில், தமிழ்நாட்டில் மட்டுமே அதிகப்படியான கல்வெட்டுகள் உள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகளை ஆய்வாளர்களை நியமித்து பராமரிக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடத்தக் கோரியும், பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரியும் பலர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளனர்.

தொல்லியல் துறை தகவல்

இதற்குப் பதிலளித்த தொல்லியல் துறை, ஏற்கனவே 92 பாதுகாக்கப்பட்ட புராதன இடங்கள் உள்ளன. மேலும் 54 பாதுகாக்கப்பட்ட புராதன இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது.

சாதி மோதலை தவிர்க்க வைத்த கல்வெட்டு
சாதி மோதலைத் தவிர்க்க வைத்த கல்வெட்டு

இதுவரை 11 ஆயிரம் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இன்னும் பல கல்வெட்டுகள் படியெடுக்கப்பட வேண்டும் எனவும் கூறியது. அரசு உரிய கவனம் செலுத்தி இந்தக் கல்வெட்டுகளைப் படியெடுத்து வெளிக்கொணர வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.

ஆய்வாளர்கள் நியமனம்

வேலையாள்கள் இல்லாமல் தொல்லியல் துறை முடங்கிப்போயுள்ளது. கண்டெடுக்கப்பட்ட 74 ஆயிரம் கல்வெட்டுகளைப் பிரதி எடுக்கும் பணி முழுமை பெறவில்லை. படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் முழுமையாக நூல் வடிவில் வெளிவரவில்லை.

தமிழி எழுத்துகளில் கல்வெட்டு
தமிழி எழுத்துகளில் கல்வெட்டு

தற்போது தொல்லியல் துறையில் 758 பணியிடங்கள் நிரப்பப்பபடுகின்றன. இதில் ஒரு பதவிகூட கல்வெட்டுத் துறைக்கு ஒதுக்கப்படவில்லை. ஒன்றிய அளவிலும், உலக அளவிலும் அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தியுள்ள அர்ப்பணிப்புள்ள தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இந்தச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கல்வெட்டுத் துறை ஆய்வுகள் இல்லாமல் முழுமையான வரலாறு சாத்தியம் இல்லை. எனவே தொல்லியல் துறைக்குத் தனிக்கவனம் செலுத்தி பணி நியமனங்களை உடனடியாக உருவாக்க வேண்டும்.

கல்வெட்டுத் துறைப் பிரிவு

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஜெனரல் குன்னிங்காம் என்னும் ஆங்கிலேயர் 1861ஆம் ஆண்டு தொல்லியல் துறையை உருவாக்கினார். இத்துறையில் 1886ஆம் ஆண்டு கல்வெட்டுத் துறை பிரிவு உருவாக்கப்பட்டது.

கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு
கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு

ஒரு இனத்தின் தொன்மையான சமூக, பண்பாட்டு வரலாற்றை ஆய்வதற்கு கல்வெட்டுச் சான்றுகளே முக்கிய இடம் வகிக்கின்றன. இவ்வகையில் இந்திய வரலாற்றில் தமிழ்நாட்டு கல்வெட்டுகளுக்கு என்று சிறப்பு உள்ளது. மைசூருவில் உள்ள கல்வெட்டுப் பிரிவில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு, நூல் வடிவில் வெளிவராமல் உள்ளன.

தமிழ் கல்வெட்டு ஆய்வாளர்கள்

இந்நிலையில் மைசூருவில் தமிழுக்கு நான்கு ஆய்வாளர்களும், சமஸ்கிருதத்திற்கு ஏழு ஆய்வாளர்களும் பணிபுரிகின்றனர். தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் அங்கும் தமிழ் கல்வெட்டு ஆய்வாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

கல்வெட்டுகளைப் படித்துப் பொருள்புரிந்து, வரலாற்றோடு இணைத்து நூல் வடிவில் வெளியிடும் திறமைகொண்டவர்கள் அருகிவருகின்றனர். இக்காலக்கட்டத்தில் போர்க்கால நடவடிக்கையில் கல்வெட்டு ஆய்வாளர்களை நியமித்து தமிழ் கல்வெட்டுகளை நூல் வடிவில் வெளிக்கொணர வேண்டும்.

மிகக்குறைவான கல்வெட்டுகள் உள்ள சமஸ்கிருத மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட, தமிழ்மொழிக்கு கொடுக்காமல் இருப்பது ஒன்றிய அரசு தமிழ் மொழியை வஞ்சிக்கும் செயலாகும்.

692ஆண்டுகள் பழமையான கல்வெட்டு
692 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு

எனவே ஒன்றிய அரசு தொல்லியல் துறை கல்வெட்டுப் பிரிவில் உடனடியாக தமிழ் ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சீனாவில் கிடைத்த தமிழ்மொழி கல்வெட்டு; பழனி சித்தர் எழுதியதாக சான்று!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.