ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 5 லட்சம் ரூபாய் கூடுதல் நிவாரணம்

author img

By

Published : Oct 19, 2022, 1:35 PM IST

Updated : Oct 19, 2022, 4:30 PM IST

Etv Bharat
Etv Bharat

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இச்சம்பவம் இரக்கமற்ற ஆட்சிக்கு உதாரணம் எனக் கூறியுள்ளார்.

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கலானது. இதன்பேரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாய் கூடுதல் நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடானது தமிழ்நாட்டு வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளி! அதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. துயரமும், கொடூரமுமான அந்தச் சம்பவத்தை இன்று நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான், உடனடியாக தூத்துக்குடிக்குச் சென்றேன்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் அமைதி வழியில் மிகத் தொடர்ச்சியாக பல்லாண்டு காலமாக தூத்துக்குடி மண்ணில் நடந்த போராட்டமாகும். இதை மேலும் வலியுறுத்தக்கூடிய வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் 22-5-2018அன்று மாபெரும் ஊர்வலத்தை, அந்தப் பகுதி மக்கள் நடத்தினார்கள்.

மாவட்ட ஆட்சியரிடத்திலே மனு கொடுக்கவே அவர்கள் இந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்தப் பிரச்னையை அன்றைய அதிமுக அரசு சரியாகக் கையாளவில்லை. ஊர்வலமாக வரக்கூடிய மக்களை அழைத்துப் பேசவில்லை. அவர்களிடம் மனுக்களைப் பெற்று கருத்துகளைக் கேட்டறிய அன்றைக்கு அந்த அரசு தயாராக இல்லை.

இதுமட்டுமல்லாமல், ஊர்வலமாக வந்த மக்கள் மீது அதிகாரத்தை அத்துமீறிப் பயன்படுத்தி கலைப்பதற்கு திட்டமிட்டார்கள். துப்பாக்கிச் சூடும் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் உறுதி செய்து அறிக்கை கொடுத்திருக்கிறது. அந்தச் சம்பவத்திலே 11 ஆண்கள், 2 பெண்கள் என 13 பேர் துள்ளத்துடிக்க பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தார்கள். 64 பேர் சிறிய அளவிலான காயங்களை அடைந்தார்கள்.

அதிமுக ஆட்சியின் ஆணவத்துக்கு தூத்துக்குடியில் இத்தனை உயிர்கள் பலியானது. கேட்பவர் அனைவருக்கும் இரத்தம் உறைய வைக்கக்கூடிய இந்தச் சம்பவம் குறித்து, அன்றைய முதலமைச்சர் பழனிசாமியிடம் ஊடகங்கள் கேட்டபோது, 'இப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்குத் தெரியாது; உங்களைப் போல நானும் டி.வி. பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்' என்று பேட்டி அளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

அப்படி அவர் சொன்னது மிகப் பெரிய தவறு என்று, அவர்கள் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே சொல்லிவிட்டது. அந்த ஆணையம் நம்மால் அமைக்கப்பட்டது அல்ல. அவர்கள் அமைத்த ஆணையம்தான். ஒருவேளை அதை நாம் அமைத்திருந்தால், இதில் அரசியல் இருக்கிறது என்றுகூட சொல்லியிருக்கலாம்.

நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் பக்கம் 252இல் இது அம்பலம் ஆகி இருக்கிறது. இந்த ஆணையத்திடம் மிக வலுவாக இருக்கும் ஆதாரம் என்னவென்றால், சாட்சியாக விசாரிக்கப்பட்ட அப்போதைய தலைமைச் செயலாளர் திருமதி கிரிஜா வைத்தியநாதன், அப்போதைய டி.ஜி.பி. ராஜேந்திரன், அப்போதைய உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடியில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள நிலவரங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து வந்ததாகக் கூறினார்கள்.

எனவே, ஊடகங்கள் மூலமாகத்தான் அந்தச் சம்பவம் பற்றி தெரிந்து கொண்டதாக அவர் கூறியது தவறான கருத்து என்பது இந்த ஆணையத்தின் கருத்தாகும். இது ஆணையத்தின் அறிக்கையில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே, இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. கொடூரமான கொலைவெறித்தாக்குதல் தொடர்பாக நேரடி வர்ணனைகளை தனது அறையில் உட்கார்ந்து கேட்டுவிட்டு, வெளியில் வந்து ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்று சொன்னவர்தான் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த பழனிசாமி அவர்கள்.

நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் நம்முடைய திமுக அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

கலவரத்தில் ஈடுபடாத நபர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. போராட்டத்தின்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட 93 நபர்களுக்கு, அந்த நபர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனுபவித்த மனவேதனைகளைக் கருத்தில்கொண்டு, 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்: இங்கேகூட பேசிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்குவதைப் பற்றி அழுத்தத்தோடு சொன்னீர்கள். இங்கே பேசிய சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துக்களின் அடிப்படையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு, ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, மேலும், கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை நான் இந்த நேரத்திலேயே தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்

காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் 30-5-2018அன்று இறந்த பரத்ராஜ் என்பவரின் தாயாருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. திரும்பப் பெறத் தகுதியுள்ள 38 வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக "தடையில்லாச் சான்றிதழ்" வழங்குவதற்கு நாம் ஆணையிட்டோம். இவையெல்லாம் நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு நடந்தவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 21 நபர்களுக்கு கடந்த ஆட்சியில் கண்துடைப்பாக சில பணிகள் வழங்கப்பட்டன. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடனே, அவர்களுடைய கல்வித் தகுதிக்கேற்ப பணியிடங்கள் 18 நபர்களுக்கு கடந்த 21-5-2021அன்று வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் மீது, துறைரீதியான நடவடிக்கை பொதுத்துறை மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையினை சேர்ந்த மூன்று வருவாய்த்துறை அலுவலர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு & மேல்முறையீடு) விதிகளின் பிரிவு 17(B)–ன் கீழ் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

உள்துறை மூலமாக, அப்போதைய தென் மண்டல காவல் துறைத்தலைவர், திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் துணைக் காண்காணிப்பாளர், மூன்று ஆய்வாளர்கள், ஒரு சார்-ஆய்வாளர் மற்றும் 7 காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் நேரடியாக ஈடுபட்ட ஒரு ஆய்வாளர் உட்பட 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்திலும் விரைவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

ஒரு ஆட்சி நிர்வாகம் இரக்கமற்று எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம்தான், கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி கொடூரம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. நிர்வாகத்தை நடத்தக்கூடிய அலுவலர்களாக இருந்தாலும், சட்டம்-ஒழுங்கைக் காக்கக்கூடிய காவலர்களாக இருந்தாலும், மனிதாபிமானம் கொண்டவர்களாக, மக்கள் சேவகர்களாக மட்டுமே நடந்து கொள்ள வேண்டுமே தவிர, வேறு மாதிரியாக நடந்து கொள்வது மனிதத் தன்மைக்கே விரோதமானது என்பதை உணர வேண்டும்.

இது ஏதோ இப்பொழுது சொல்கிற உறுதிமொழி அல்ல; ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தேர்தல் நேரத்தில் சொன்ன உறுதிமொழி தான். யார், யார் குற்றவாளிகளோ, அவர்களெல்லாம் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: பரந்தூர் விமானநிலையம்: 3.5 கோடி பயணிகளைக் கையாளவும்,புதிய முதலீடுகளைப் பெறவும் வாய்ப்பு - அமைச்சர் தங்கம்தென்னரசு

Last Updated :Oct 19, 2022, 4:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.