ETV Bharat / state

டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி.. தொடர்ந்து குற்ற வழக்குகள் வருவதாக நீதிபதி பதில்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 4:37 PM IST

Etv Bharat
Etv Bharat

TTF Vasan bail dismissed: டிடிஎஃப் வாசன் மீது தொடர்ந்து விபத்து ஏற்படுத்தக் கூடிய வழக்குகள் வருவதால், அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரித்துள்ளார்.

டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு நிராகரிப்பு

சென்னை: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், கடந்த 17ஆம் தேதி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் உயர் ரக பைக்கில் சென்று சாகசம் செய்ய முயன்று விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். கை முறிவு ஏற்பட்ட நிலையில், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில், பாலுசெட்டிசத்திரம் காவல் துறையினர் வாசன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-இல் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வரும் அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளித்து புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்றே வாசன் தரப்பினர், ஜாமீன் கேட்ட நிலையில், ஜாமீன் மனுவை நீதிபதி இனியா கருணாகரன் தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎஃப் வாசன் கை முறிவு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆன நிலையில் இன்று (செப்.21) மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றம் எண் 2-இல் நீதிபதி செம்மல் முன்னிலையில் ஜாமீன் கேட்டு டிடிஎஃப் வாசனின் வழக்கறிஞர்கள் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீது விசாரணை நடைபெற்ற நிலையில், டிடிஃஎப் வாசன் மீது விபத்து ஏற்படுத்தும் வழக்குகள் தொடர்ந்து வரும் நிலையில், அவருக்கு இரண்டு நாட்களிலேயே ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்காமல் மாவட்ட நீதிபதி செம்மல் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையும் படிங்க: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது! போலீசார் கொடுத்த தகவல் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.