பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது! போலீசார் கொடுத்த தகவல் என்ன?

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது! போலீசார் கொடுத்த தகவல் என்ன?
TTF vasan arrest: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக் வீலிங் செய்து விபத்துக்குள்ளான நிலையில், தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: உயர் ரக பைக்குகளில் வீலிங் செய்வது, நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வது என யூடியூபில் மிகப் பிரபலமாக இருந்து வருபவர் டிடிஎஃப் வாசன். இவர் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி சென்னையில் இருந்து மராட்டிய மாநிலத்திற்கு அவரது விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்ய முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்தில் சிக்கியது. இதில் டிடிஎப் வாசன் வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்தார். அதன் பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் டிடிஎஃப் வாசனை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் பைக் வீலிங் செய்வது போன்ற காட்சிகளும், விபத்தில் சிக்கும் சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இவர் பல்வேறு முக்கிய சாலைகளில் அதிவகமாக பைக் ஓட்டுவது பைக் சாகசங்கள் செய்வது தொடர் கதையாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் போலீசார் முக்கிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட டிடிஎஃப் வாசன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து டிடிஎஃப் வாசன் சென்னை அம்பத்தூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று (செப். 19) காலை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் அதிரடியாக டிடிஎஃப் வாசனை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே இரண்டு பிரிவின் கீழ் காஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் மேலும் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டப்பிரிவு 308, 279, 336 மற்றும் மோட்டார் வாகன சட்ட பிரிவு ஆகிய நான்கு பிரிவுக்கு வழக்கு பதிவு செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொது மக்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் நோக்கில் இரு சக்கர வாகனத்தை இயக்குவதாக கூறி டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து காவல் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் இதே போல் சென்னை அண்ணா நகரில் சில மாதங்களுக்கு முன்பு டிடிஎஃப் வாசன் ஓட்டி சென்ற கார் விபத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இவர் விபத்துக்கள் ஏற்படுத்தும் வண்ணம் இரு சக்கர வாகனம், கார்களை ஓட்டி வரும் நிலையில் காஞ்சிபுரம் போலீசார் இவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் டிடிஎஃப் வாசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளிலும் போலீசார் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன், டிடிஎஃப் வாசன் பிறந்த நாளை முன்னிட்டு அவர் கதாநாயகனாக அறிமுகமாக உள்ள "மஞ்சள் வீரன்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வாசன் கைது செய்யப்பட்டது அவரை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வேலை வாங்கி தருவதாக கூறி வடமாநிலத்தவர்கள் கடத்தல்.. 7 பேர் கைது!
