ETV Bharat / state

கோயம்பேட்டில் தக்காளி ரூ.20 குறைந்து ரூ.110க்கு விற்பனை!

author img

By

Published : Jul 14, 2023, 12:45 PM IST

கோயம்பேடு சந்தையில் தக்காளி ஒரு கிலோவுக்கு ரூபாய் 20 குறைந்து ரூபாய் 110க்கு விற்பனை செய்யப்படுகிறது
கோயம்பேடு சந்தையில் தக்காளி ஒரு கிலோவுக்கு ரூபாய் 20 குறைந்து ரூபாய் 110க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி இன்று (ஜூலை 14) ஒரு கிலோவுக்கு ரூபாய் 20 குறைந்து ரூபாய் 110க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: தக்காளி விளையும் பகுதிகளில் நிலவும் வெப்பம் மற்றும் கன மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்துகொண்டே வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை விளைச்சல் குறைந்ததாலும், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததாலும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று (ஜூலை 14) ஒரு கிலோவுக்கு ரூபாய் 20 குறைந்து ரூபாய் 110க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் தொடர் மழை காரணமாக தக்காளியின் வரத்து குறைந்தது. இதன் மூலம் தக்காளியின் விலை கடந்த 20 நாட்களாக உச்சத்தைத் தொட்டது. தக்காளியை குறைந்த விலைக்கு கொடுக்க நியாய விலைக் கடைகள் மற்றும் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி நியாய விலைக் கடைகள் மற்றும் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் தக்காளியின் விலை ரூபாய் 60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தக்காளி விலை ரூபாய் 20 குறைந்தது என்பது குறித்து பேசிய கோயம்பேடு காய்கறி சந்தையின் ஆலோசகர் சௌந்தரராஜன், ''கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளியின் விலை ரூபாய் 110க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் ரூபாய் 130க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி ரூபாய் 20 குறைந்து உள்ளது. வழக்கமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு 1500 டன் தக்காளி வரத்து இருக்கும். ஆனால், தற்பொழுது 500 டன்னுக்கும் குறைவாகவே தக்காளி வரத்து உள்ளது.

வரத்து அதிக அளவில் குறைந்ததன் காரணமாகவே தக்காளியின் விலை உச்சத்தைத் தொட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த தக்காளியின் விலை ரூபாய் 90லிருந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் வரத்து குறைவைப் பயன்படுத்தி ஒரு சில வியாபாரிகள், அதை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தக்காளியின் விலை இன்னும் குறையாமல் உள்ளது.

நேற்றைய தினத்தைவிட இன்று தக்காளியின் வரத்து கணிசமாக உயர்ந்து உள்ளது. இதனால் தக்காளியின் விலை ரூபாய் 20 குறைந்து உள்ளது. இனி வரும் நாட்களில் தக்காளியின் வரத்து சீராகி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என நினைக்கின்றேன்'' எனக் கூறினார்.

சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 130க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் பத்து நாட்களில் தக்காளியின் விலை சரி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்து உள்ளார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் விலை இன்று கிலோவுக்கு ரூபாய் 30 அதிகரித்து 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, சின்ன வெங்காயம் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், இஞ்சி 220 ரூபாய்க்கும், பூண்டு விலை 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: விலைவாசி உயர்வு; திமுக அரசைக் கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் - முழுவிவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.