ETV Bharat / state

விலைவாசி உயர்வு; திமுக அரசைக் கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் - முழுவிவரம்!

author img

By

Published : Jul 13, 2023, 7:44 PM IST

Etv Bharat
Etv Bharat

அத்தியாவசிய உணவுப் பொருள்களில் விலைவாசி உயர்வையும், அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதையும் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக சார்பில், வரும் 20ஆம் தேதி காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை: அத்தியாவசிய உணவுப் பொருள்களில் விலைவாசி உயர்வைக் கண்டித்தும் அதிமுக சார்பில், வரும் 20ஆம் தேதி காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடியா திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற இந்த இரண்டாண்டு காலத்தில், தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

மக்கள் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தும் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பீன்ஸ், அவரைக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும்; துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, புளி, சீரகம் உள்ளிட்ட மளிகைப் பொருள்களின் விலைகளும் தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குவதாக வெற்றுத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விடியா அரசு, அதை முறையாக செயல்படுத்தவில்லை. விலைவாசி உயர்வு காரணமாக, சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழவே முடியாத சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக் காலங்களின்போது, இயற்கை இடர்பாடுகளாலும், இன்னும் சில காரணங்களாலும் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வு ஏற்படும் நேரங்களில், அம்மாவின் அரசு தனிக் கவனம் செலுத்தி, அதற்கு ஏற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருள்களை கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டகசாலைகள் மூலமாக மக்களின் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட்டதுடன், அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையை கட்டுக்குள் வைத்தது அம்மாவின் அரசு.

அதேபோல், இந்த இரண்டாண்டு விடியா ஆட்சியில், தமிழ்நாட்டு மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். வாழவே வழியற்று நிர்கதியாய் நிற்கின்ற மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. தமிழ்நாட்டு மக்கள் 10 ஆண்டுகள் காலமாக மறந்து போயிருந்த மின்வெட்டு, நிர்வாகத் திறனற்ற விடியா அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டால் சிறு, குறு தொழில் முனைவோர் செய்வதறியாது கலங்கி நின்ற நேரத்தில், மூன்று மடங்கிற்கும் மேலான மின்கட்டண உயர்வு என்ற பேரிடியை இறக்கியது இந்த விடியா திமுக அரசு.

மனசாட்சியற்ற இந்த விடியா அரசு, கழக அரசு கொடுத்து வரும் இலவச மின்சாரத்தையும் தடுப்பதற்கான முயற்சிகள்; அதைத் தொடர்ந்து சொத்து வரி, வீட்டு வரி 100 விழுக்காடு, கடை வரி 150 விழுக்காடு வரை உயர்வு - இதன் காரணமாக வீட்டு வாடகை உயர்வு; பால் மற்றும் பால் பொருள்களின் விலை உயர்வு; கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு; வெளியூர் செல்லும் பேருந்துகளின் கட்டணம் வானளாவ உயர அனுமதித்தது இந்த விடியா திமுக அரசு.

இது போதாதென்று, விடியா திமுக அரசு, பத்திரப் பதிவுத் துறையில், மக்கள் தங்கள் சொத்துகளை சந்ததியினருக்கு பெயர் மாற்றம் செய்தல், குடியிருப்பதற்கு மனை வாங்குதல், சொத்துகளை அடமானம் வைத்து கடன் பெறுதல் உள்ளிட்ட பதிவுகளுக்கு பல மடங்கு கட்டணங்களை உயர்த்தி, மக்களை மேலும் கடனாளிகளாக ஆக்கப் பார்க்கிறது. திறனற்ற விடியா திமுக அரசின் ஆட்சிக் காலத்தில், அனைத்துத் துறைகளும் ஊழல்மயப்படுத்தப்பட்டு நாட்டின் ஜனநாயகம் கேலிப் பொருளாக்கப்பட்டு மக்கள் வாழ்வு சீரழிக்கப்படுகிறது” என விமர்சித்தார்.

மேலும், “மின்சாரத் துறை, டாஸ்மாக், பத்திரப் பதிவுத் துறை என தொடங்கி சகல துறைகளிலும் ஊழல் கோலோச்சுகிறது. சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாக்கு மேல் முறைகேடாக முதலமைச்சரின் மகனும், மருமகனும் ஓர் ஆண்டில் சேர்த்திருக்கிறார்கள் என்று முன்னாள் நிதி அமைச்சர், தற்போதைய அமைச்சர் பேசிய ஆடியோ பதிவிற்கு முதலமைச்சர் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை; எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை; எந்த ஒரு விசாரணையும் இல்லை.

நாட்டில் அனுமதியின்றி நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பார்கள் இயங்குகிறது என்று நான் குற்றச்சாட்டு வைத்து, கழகம் போராடிய நிலையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக பார்களுக்கு சீல் வைத்தது விடியா அரசு என்றால், இரண்டாண்டு காலம் அந்த பார்கள் அனுமதியின்றி இயங்கியது உண்மைதானே. அப்படியெனில், இரண்டாண்டுகள் அந்த முறையற்ற பார்களில் இருந்து பல கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டது தெரியவருகிறது.

இதுபோல, அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. ஊழலில் திளைக்கின்ற விடியா திமுக அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோதப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்நாட்டில் இவ்வளவு அவலங்கள், வன்முறைகள், விலைவாசி உயர்வு, பல்வேறு துறைகளில் ஊழல் ஆகிய எதையும் கண்டுகொள்ளாமல், குடும்ப நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு மு.க.ஸ்டாலின் பொம்மை முதலமைச்சராக இருந்து வருகிறார்.

எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கிறார். முதலமைச்சரின் இத்தகைய மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நிலையில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வையும்; அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதையும் கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும்; இவைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைக் கண்டித்தும், அதிமுக சார்பில், 20.07.2023 வியாழக்கிழமை காலை 10 மணியளவில், வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும்; கழகம் மற்றும் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும்; கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை, வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்களும், நிர்வாகிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும். மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், விடியா திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்ட அமைச்சர் பொன்முடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.