ETV Bharat / state

இதுக்கு ஒரு எண்டே இல்லையா சார்.? தக்காளி விலை உயர்வால் தத்தளிக்கும் மக்கள்.!

author img

By

Published : Jul 29, 2023, 5:05 PM IST

ஒரு மாதத்திற்கு மேலாகத் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் சில்லறை விலையில் இன்று கிலோ ஒன்றுக்கு மேலும் 10 ரூபாய் அதிகரித்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: ஆந்திரா மற்றும் கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் தக்காளி விலை தங்கம் விலைபோல் நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது. கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று 200 ரூபாயைக் கடந்து நிற்கிறது.

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் சுமார் 470 லோடு காய்கறிகள் விற்பனைக்காகக் கொண்டுவரப்படுகின்றன.

அதில் முக்கியமாகக் கொண்டுவரப்படுவது தக்காளி மற்றும் வெங்காயம் ஆகியவை. இதில் தக்காளி மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 1200 டன் விற்பனைக்காகக் கொண்டுவரப்படும் நிலையில் தற்போது வெறும் 400 டன் தக்காளி மட்டுமே கொண்டுவரப்படுகின்றன. இதனால் தக்காளி விலை சில்லறை விற்பனையில் பங்குச் சந்தை நிலவரம் போல் தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த வாரம் தக்காளி மொத்த விலையில் 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை குறைந்தது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், அதற்கு நேர் மாறாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இருந்தே தக்காளி விலை மெல்ல மெல்ல அதிகரித்தது. நேற்று(ஜூலை 28) கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று(ஜூலை 29) தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அதேபோல், முதல் ரகம் தக்காளி 150 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் தக்காளி 140 ரூபாய்க்கும் மூன்றாம் ரகம் தக்காளி 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தக்காளி விலையைக் கட்டுக்குள் கொண்டுவர வரும் நாட்களிலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் கடும் வெயில் வாட்டிய நிலையில், பாசன நீர்ப் பற்றாக்குறை, வெயிலில் செடிகள் பாதிக்கப்படுவது போன்ற காரணங்களால் தக்காளி அறுவடை குறைந்து விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக இந்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2-வது வாரம் வரை தக்காளி விலை குறைவாகவே இருந்தது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் தக்காளி விலை மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், தற்போது 200 ரூபாயைக் கடந்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டு தக்காளி சீசன் உள்ள நேரங்களில் அதற்கு உரிய விலை கிடைக்காமல் கவலைப்பட்ட விவசாயிகள் சாலை ஓரங்களில் தக்காளிகளை லோடு கணக்கில் கொட்டி சென்ற செய்திகளும் வெளியாகின. இதனால் இந்த ஆண்டு ஏராளமான விவசாயிகள் தக்காளி பயிரிடவில்லை எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற பல காரணங்களால்தான் தக்காளி விலை தங்கம் விலைபோல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: நடைபயிற்சி செய்தபோது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.