ETV Bharat / state

பொறியியல் கலந்தாய்வு 2 சுற்றுகள் நிறைவு - 80 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

author img

By

Published : Oct 13, 2022, 10:23 PM IST

Etv Bharat
Etv Bharat

பொறியியல் கலந்தாய்வில் இரண்டு சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், 80 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் கூட மாணவர்கள் சேரவில்லை என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார். கலந்தாய்வு முடிவில் 65ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.

சென்னை: தமிழ்நாட்டில் பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர்வதற்கான பொறியியல் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கியது.

முதல் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவு, தொழில் பிரிவு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 13ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், முதல் மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவுகள் குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி கூறும்போது, "தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையில் 2 சுற்று கலந்தாய்வின் முடிவில் 31,053 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பொறியியல் படிப்பில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 251 இடங்கள் இருந்த நிலையில், 2 சுற்றுகள் முடிவில் 27,740 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இரண்டு சுற்றுகளில் மொத்தம் உள்ள 446 கல்லூரிகளில் 80 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் கூட மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. கடந்தாண்டு 72 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. 7 அரசு கல்லூரிகள் உட்பட 323 கல்லூரிகளில் 10 சதவீதம் இடங்கள் கூட நிரப்பப்படவில்லை. 123 கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கும் மேல் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது.

4 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் உட்பட 12 கல்லூரிகளில் 90 சதவீதம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 21 கல்லூரிகளில் 80 சதவீதமும், 48 கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. முதல் இரண்டு சுற்றுகளில், சிஎஸ்இ, ஐடி, இசிஇ, டேட்டா சயின்ஸ் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளை மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்துள்ளனர். கிண்டி பொறியியல் கல்லூரியில் அளிக்கப்படும் சிவில், மெக்கானிக்கல் தமிழ் பாடப்பிரிவினையும் மாணவர்கள் மிகவும் குறைவாக தேர்வு செய்துள்ளனர்.

செராமிக், ரப்பர் பிளாஸ்டிக், டெக்ஸ்டைல்ஸ், பெட்ரோலியம் மற்றும் தோல் தொழில்நுட்பம் ஆகிய சிறப்பு வாய்ந்த பாடப்பிரிவையும் அதிகம் மாணவர்கள் விரும்பவில்லை.மாணவர்களுக்கு கலந்தாய்வில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட மேல் நோக்கி செல்லும் நகர்வின் மூலம் விரும்பிய இடங்களில் தற்காலிக ஒதுக்கீட்டில் கீழே இருந்த மாணவர் மேலே விரும்பிய இடத்தை பெற்றுள்ளார்.

உதாரணமாக தற்காலிக ஒதுக்கீட்டில் விரும்பிய வரிசையில் 35 பதிவு கிடைத்தவருக்கு ஒதுக்கீட்டின் போது 4வதாக பதிவு செய்த விரும்பிய கல்லூரி மற்றும் பாடப்பிரிவு கிடைத்துள்ளது. அடுத்த 2 சுற்றுகளுக்காக 1,11,511 இடங்கள் காலியாக இருக்கின்றன. 3 மற்றும் 4வது சுற்று கலந்தாய்வு மிகவும் சவாலானதாகவே இருக்கும். இதே நிலையில் சென்றால் பொறியியல் கலந்தாய்வின் முடிவில் 65,000 இடங்கள் காலியாக இருக்கக்கூடும். கடந்தாண்டு கலந்தாய்வு முடிவில் 56,802 இடங்கள் காலியாக இருந்தன" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதுகலை ஆசிரியர் பணிக்கு நாளை நேரடி கலந்தாய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.