ETV Bharat / state

இன்று மாலை ஆளுநரைச் சந்திக்கிறார் அண்ணாமலை.. 'திமுக பைல்ஸ்-2' விவகாரம் என தகவல்!

author img

By

Published : Jul 26, 2023, 12:24 PM IST

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை26) மாலை 3 மணிக்கு சந்திக்கிறார். நாளை மறுநாள் ராமேஸ்வரத்தில் பாதயாத்திரை தொடங்கவுள்ள நிலையில் இந்த சந்திப்பானது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்காகவும், திமுகவை எதிர்க்கவும் 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையைத் தொடங்குகிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கும் இந்த பாதயாத்திரையில் தமிழ்நாட்டில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்திக்க இருக்கிறார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை 'திமுக பைல்ஸ் 1' என்ற தலைப்பில் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார். 11 பேர் கொண்ட பட்டியலில் ஒரு லட்சத்து 30,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்கள் இருப்பதாகக் கூறியிருந்தார்.

இதனை அடுத்து 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட திமுகவினருடைய சொத்துப் பட்டியல் 'திமுக பைல்ஸ் 2' என்ற தலைப்பில் பாதயாத்திரைக்கு முன்பு வெளியிடப்படும் என கூறியிருந்தார். 'என் மண் என் மக்கள்' என்ற இணையதளத்தில் 'திமுக பைல்ஸ் 2' வெளியாகும் என பாஜக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: புதிய மாதிரி பாடத்திட்டம் 2023 - 2024 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் - அமைச்சர் பொன்முடி

மேலும், இந்த பட்டியலை அனைத்து ஆவணங்களுடனும், தரவுகளுடனும் ஆளுநர் ரவியிடம் அண்ணாமலை சமர்ப்பிக்க உள்ளார். இந்த பட்டியலில் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்த நபர்களும் இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது. 'திமுக பைல்ஸ் 1' வெளியிடப்பட்ட பொழுது அண்ணாமலை மீது திமுகவினர் அவதூறு வழக்கு தொடர்ந்து, இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில், 'திமுக பைல்ஸ் 2', இதற்கும் பல அவதூறு வழக்குகள் அண்ணாமலை மீது பாயும் என பேச்சுக்கள் அடிபடுகின்றன. மேலும், செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்கின்ற விவகாரமும் ஆளுநர் ரவியிடம் பேசப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: "ரூ.3 லட்சம் கொடுத்து சரி கெட்ட நினைத்தார்கள்" - நெல்லை இளைஞர் கொலை வழக்கில் பெற்றோர் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.