ETV Bharat / state

எதிர்கால தமிழகத்தை கஞ்சிக்கு கெஞ்ச விடாதீர்கள்; தமிழ்நாடு வேளாண் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வேதனை!

author img

By

Published : Jun 23, 2023, 9:05 PM IST

Etv Bharat
Etv Bharat

தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்பட்டு வரும் வேளாண் அறிவியல் பாடப்பிரிவினை நீக்கி விட்டு எதிர்கால தமிழகத்தை கஞ்சிக்கு கெஞ்ச விடாதீர்கள் என தமிழ்நாடு வேளாண் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்கால தமிழகத்தை கஞ்சிக்கு கெஞ்ச விடாதீர்கள்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 60க்கும் மேற்பட்ட தொழிற்பாடப்பிரிவுகள் இருந்தது. அதில் முக்கியமாக, வேளாண் அறிவியல் பாடப்பிரிவிலும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு வேளாண் அறிவியல் பாடம் கற்றுத் தரப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தற்பொழுது வேளாண் அறிவியல் பாடத்தினை எடுப்பதற்கு போதுமான ஆசிரியர்களை பணியில் அமர்த்தாமல் உள்ளனர். இதனால் வரும் காலங்களில் மாணவர்கள் வேளாண் அறிவியல் சார்ந்த உயர்கல்வியினை பெறுவதிலும் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

தமிழ்நாடு வேளாண் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.மாதவன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேளாண் அறிவியல் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்பொழுது 50 க்கும் மேற்பட்டப் பள்ளிகளில் வேளாண் அறிவியல் பாடப்பிரிவு ஆசிரியர்கள் இல்லாமல் உள்ளது.

2018 ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வேளாண் அறிவியல் பாடப்பிரிவு ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அந்தப் பணியிடங்கள் தற்போதுவரை நிரப்பப்படாமல் உள்ளது. 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு வேளாண் அறிவியல் பாடத்தினை கற்பிக்க வேண்டும்.

வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் கல்வியைத் தனி பாடமாக அறிமுகம் செய்வதால் மாணவர்கள் செயல்முறை கற்றலை வாழ்க்கையில் செயல்படுத்தி அவர்களும், சமுதாயமும் வளர்வதற்கு வாய்ப்பாக அமையும். பொதுக் கல்வி திட்டத்தில் கற்பிக்கப்படும் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களை படிப்பதுடன் வாழ்வில் செயல்படுத்துவதில் மாணவர்களுக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், இயற்கை மற்றும் வாழ்வியலுடன் தொடர்புடைய வேளாண் அறிவியல் பாடத்தை பொது கல்வி திட்ட பாடப்பிரிவில் ஒரு பாடமாக இணைத்து உருவாக்கிட வேண்டும்.

தொழிற்கல்வி, வேளாண் அறிவியல் மற்றும் இதர தொழிற்கல்விப் பாடப்பிரிவுகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த கம்ப்யூட்டர் தொழில்நுட்ப பாடம் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அதனை நீக்கி விட்டு வேலை வாய்ப்பு திறன்கள் என்ற பாடத்திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்டத்தை நடத்துவதற்கு தனியார் நிறுவனத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வேளாண் அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள அறிவியல் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வழங்கப்பட்டு வரும் இளநிலைப் பட்டப் படிப்புகளில் இட ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது.

எனவே, மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வேளாண் அறிவியல் பாடத்தினை முழுவதுமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்பொழுதைய நிலையில் மாறிவரும் விவசாயத்திலிருந்து இயற்கை விவசாயத்திற்குச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். மாணவர்களுக்கு விவசாயத்தை கற்றுத் தந்தால் அவர்கள் மூலம் பெற்றோர்களுக்குச் சென்று இயற்கை விவசாயம் மீண்டும் வரும்.

எதிர்கால சந்ததியினர் விவசாயத்தினை செய்து வயிற்றுக்கு உணவு அளிப்பதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் வேளாண் அறிவியல் பாடத்தினை கொண்டு வர வேண்டும் எனவும், எதிர்கால தமிழகத்தை கஞ்சிக்கு கெஞ்ச விடாதீர்கள் என்பதுதான் எங்களது மிக பெரிய கோரிக்கை" எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Benefits of Black Pepper : முதுமையை தடுக்கும் மிளகு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.