ETV Bharat / state

"விவசாயிகள் தகவல் பரிமாற்றத்திற்காக வாட்ஸ்அப் குழுக்கள்" - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

author img

By

Published : Mar 21, 2023, 4:54 PM IST

Agri
Agri

விவசாயிகளுக்கு தகவல் பரிமாற்றத்திற்காக வட்டார அளவில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்கப்படும் என்றும், பயிர்க் காப்பீட்டுக்கு 2,337 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் துறைக்கான பட்ஜெட்டில், பயறு பெருக்குத் திட்டம், தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப் குழு, பருத்தி இயக்கம் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

மின்னணு வேளாண்மைத் திட்டம் - நவீன மின்னணு தொழில்நுட்பங்களை வேளாண்மையிலும் உட்புகுத்தி, விவசாயிகள் எளிய முறையில் துரிதமாகக் கையாண்டு பயன்பெற ஏதுவாக, கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு, 37 வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகள் இடுபொருட்கள் பெறுவதற்கு வசதியாக சோதனை முறையில் பணமில்லா பரிவர்த்தனை செயல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வரும் ஆண்டில் 37 மாவட்டங்களில் 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் பணமில்லா பரிவர்த்தனை விரிவுபடுத்தப்படும்.

வேளாண் மின்னணு உதவி மையம் - விவசாயி சார்ந்த அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் மின்னணு முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள உதவும் வகையில், 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உதவியுடன் மின்னணு உதவி மையங்கள் (இ-சேவை) இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

தகவல் பரிமாற்றக்குழு - விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள், சந்தை நிலவரம், வானிலை முன்னறிவிப்புகள், மானியங்கள், பூச்சி-நோய் தாக்குதல் போன்ற தகவல்களை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கு ஏதுவாக, வட்டார அளவில் விவசாயிகளை உள்ளடக்கி வாட்ஸ்அப் குழு உருவாக்கப்படும். இக்குழுவில் அனைத்து குக்கிராமங்களிலிருந்தும், விவசாயிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். இதன் ஒருங்கிணைப்பாளராக வட்டார வேளாண்மை உதவி இயக்குநரும், தோட்டக்கலை உதவி இயக்குநரும் செயல்படுவார்கள்.

கிரைன்ஸ் இணையதளம் - தமிழ்நாட்டில் உள்ள நில உரிமையாளர், சாகுபடி செய்யும் விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளின் அடிப்படை தகவல்களான வங்கிக் கணக்கு, ஆதார் எண், நில விவரங்கள், பயிர் சாகுபடி விவரங்களை கிராம வாரியாக சேகரித்து, கணினிமயமாக்கி 'GRAINS- Grower Online Registration of Agriculture Inputs System' என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்படும். இதனால் விவசாயிகளுக்கு ஒரே தளத்தில் எல்லா பயன்களும் கிடைக்கும்.

ஒருங்கிணைந்த பண்ணையம் - 50 ஆயிரம் ரூபாய் மானியத்தில் 10 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணையத் தொகுப்புகளுக்கு வரும் நிதியாண்டில் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

பயறு பெருக்குத் திட்டம் - தமிழ்நாட்டில் பயறு வகைகளின் பரப்பளவையும், உற்பத்தியையும் அதிகரிக்க பயறு பெருக்குத் திட்டம் வரும் நிதியாண்டில் 30 கோடி ரூபாயில் மத்திய மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

துவரை மண்டலம் - கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் துவரை மண்டலமாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து துவரையை நடவு முறையில் சாகுபடி செய்ய 18 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இது தவிர, விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், 60 ஆயிரம் மெட்ரிக் டன் உளுந்தும், 12 ஆயிரம் மெட்ரிக் டன் பச்சைப்பயறும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகள் நலம் காக்கப்படும்.

எண்ணெய் வித்துக்கான சிறப்பு திட்டம் - தமிழ்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை உயர்த்திடும் நோக்கத்துடன், சூரியகாந்தி பயிரின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், அதிக லாபம் தரக்கூடிய நிலக்கடலை, எள், சோயா மொச்சை போன்ற பயிர்களைப் பரவலாக்கம் செய்திடவும் வரும் நிதியாண்டில் 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

எண்ணெய் வித்து சிறப்பு மண்டலம் - நிலக்கடலை, எள் போன்ற முக்கிய எண்ணெய் வித்துக்கள் அதிகம் விளையும் மாவட்டங்களான திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, தருமபுரி, நாமக்கல், சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, கடலூர், திருப்பத்தூர், அரியலூர், வேலூர், புதுக்கோட்டை ஆகியவற்றை ஒருங்கிணைத்து எண்ணெய் வித்துக்கள் சிறப்பு மண்டலமாக உருவாக்கி, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, மதிப்புக்கூட்டுதல், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி ஆகியவற்றுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

தென்னை வளர்ச்சி மேம்பாடு - தென்னை வளர்ச்சி வாரிய திட்டத்தில் வரும் ஆண்டில், ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் குறித்த செயல்விளக்கத் திடல்கள் 10 ஆயிரம் எக்டர் பரப்பிலும், மண்டல தென்னை நாற்றுப் பண்ணைகள் தோற்றுவித்தல், எருக்குழி தோற்றுவித்தல், மறுநடவு புத்தாக்கத் திட்டம் உள்ளிட்டவை 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

குட்டை-நெட்டை வீரிய ஒட்டு ரகத் தென்னை நாற்று உற்பத்தியை அதிகரித்தல் - குட்டை- நெட்டை வீரிய ஒட்டு இரக தென்னைக்கு விவசாயிகளிடத்தில் அதிகத் தேவை இருப்பதால் கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம், தென்காசி மாவட்டம் செங்கோட்டை, விருதுநகர் மாவட்டம் தேவதானம் ஆகிய இடங்களில் உள்ள மாநில தென்னை நாற்றுப்பண்ணைகளில் கூடுதலாக 10,000 குட்டை-நெட்டை வீரிய ஒட்டு இரக நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.

பருத்தி இயக்கம் - பருத்திப் பயிரின் உற்பத்தியை உயர்த்தும் வகையில், இவ்வரசு நீடித்த நிலையான பருத்தி இயக்கத்தினைச் செயல்படுத்தி வருகிறது. வரும் ஆண்டிலும் பருத்தி உற்பத்தியை 4 லட்சத்து 52 ஆயிரம் பேல்களாக உயர்த்தும் வகையில், 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டம் - வரும் ஆண்டில், பயிர்க் காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்களிப்பாக 2,337 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு வெளிநாடுகளில் பயிற்சி ; பள்ளி மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.