ETV Bharat / state

CCTV: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரம் - 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது!

author img

By

Published : Feb 17, 2023, 11:12 PM IST

CCTV: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரம் - 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது!
CCTV: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரம் - 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது!

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் மையங்களில் ரூ.73 லட்சம் கொள்ளையடித்த விவகாரத்தில் 2 மேவாட் கொள்ளையர்களை ஹரியானாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சிசிடிவி: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரம்- 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது!

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி தொடர்ச்சியாக 4 ஏடிஎம் மையங்களை உடைத்தும், கொளுத்தியும் ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல மாநிலங்களுக்குச் சென்று போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, காரில் வந்த 6 வடமாநில கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளில் பதிவான காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியபோது, ஆந்திர மாநிலம் - சித்தூரில் கடந்த மாதம் 29ஆம் தேதி கொள்ளையர்கள் காரை திருடி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் கார் சென்ற இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கர்நாடகா கோலார் பகுதியில் உள்ள லாட்ஜுக்கு கொள்ளையர்கள் சென்றது தெரியவந்தது. பின்னர், லாட்ஜில் இருந்து கன்டெய்னர் மூலமாக அரியானா மாநிலத்திற்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. குறிப்பாக கொள்ளையடித்த பணத்தை பங்கிட்டு பல்வேறு குழுக்களாக கொள்ளையர்கள் பிரித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் சிசிடிவி காட்சிகளில் பதிவான அடையாளங்கள் மற்றும் செல்போன் ஆதாரங்களை வைத்து ஹரியானாவில் பதுங்கி இருந்த கொள்ளை கும்பலின் தலைவன் முகமது ஆரிப் (35) மற்றும் ஆஜாத்(37) ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்த இவர்களிடம் இருந்து மூன்று லட்சம் ரூபாய் மற்றும் ஒரு வாகனத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் மேவாட் கொள்ளையர்கள் என்பதும் கடந்த 28ஆம் தேதி ஆந்திராவிற்கு சென்று காரை திருடிவிட்டு, அதன் மூலமாக திருவண்ணாமலைக்கு வந்ததும், அதன் பின்னர், திருவண்ணாமலையில் எந்தெந்த ஏடிஎம் மையங்களில் காவலாளிகள் இல்லை என்பதை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர், கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு சிசிடிவி காட்சிகளில் பதிவாகாமலும், டோல் பிளாசாவில் சிக்காமலும் செல்வது தொடர்பாக கூகுள் மேப்பை கொள்ளையர்கள் பயன்படுத்தி, தப்பித்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அதன் பின்னர், கொள்ளை அடித்த பணத்தை பங்கு பிரித்துக்கொண்டு அரியானாவில் உள்ள தனது உறவினர்களுக்கு பிரித்து கொடுத்ததாகவும் போலீசார் விசாரணையில் கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்களை ஹரியானாவில் இருந்து விமானம் மூலமாக திருவண்ணாமலைக்கு அழைத்து வரும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மீதமுள்ள தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் மீதமுள்ள பணத்தையும் மீட்கும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறைச்சாலையில் தற்கொலை முயற்சி - வெளியான திடுக்கிடும் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.