ETV Bharat / state

தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒமைக்ரான் பிஏ5 வகை பாதிப்பு உறுதி!

author img

By

Published : Jun 5, 2022, 5:16 PM IST

ராதாகிருஷ்ணன் பேட்டி
ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழ்நாட்டில் 8 பேருக்கு பிஏ5 உருமாறிய கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று(ஜூன் 5) ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் குறிப்பிட்ட இடங்களில் கரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்தால், அந்தப்பகுதியில் இருந்து கரோனா தொற்று உருமாறி உள்ளதா? என்பது குறித்து மரபணு பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் கடந்த 26ஆம் தேதிக்கு முன்னர் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு மரபணு பரிசோதனை செய்யப்பட்டது. 139 பேருக்கு செய்யப்பட்டப் பரிசோதனையில், 8 பேருக்கு பிஏ5 வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேருக்கு பிஏ4 வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டுமே ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் ஆகும்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக பிஏ5 உருமாறிய கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குணமடைந்து விட்டனர். இந்த வைரஸ் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. காய்ச்சல், தொண்டைவலி போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.

பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: அண்டை மாநிலங்களான கேரளா, மகராஷ்டிராவில் பிஏ5 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு, பாதிப்பு அதிகளவில் இருந்து வருகிறது. கரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பாதிப்பு அதிகளவில் இல்லை. எனவே தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். பொது மக்கள் யாரும் அச்சப்படத்தேவையில்லை. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். மாஸ்க் அணிவது, தனி நபர் இடைவெளி ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்.

மேலும் கரோனா தொற்று பாதிப்பு முதல், இரண்டாம் அலையின் பாதிப்பைவிட 3ஆவது அலையில் ஏப்ரல் மாதத்தில் 22 என குறைந்தது. ஆனால், தற்பொழுது மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பாதிப்பு இருந்து வருகிறது. கோயம்புத்தூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 பேருக்கு மேல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ராதாகிருஷ்ணன் பேட்டி

மீண்டும் முழு ஊரடங்கு?: தமிழ்நாட்டில் கரோனா நோயாளிகள் 790 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அவர்களில் 46 பேர் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 பேர் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர். இதில் 6 பேர் ஐசியூவில் உள்ளனர். இவர்களும் பிற நோய்களின் தாக்கத்திற்கான பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் கூட்டம் கூடும் இடங்களிலும், பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளும்போது கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை வராது. தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும், ஆக்ஸிஜன் வசதிகளும் உள்ளன" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கடலூர் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.