ETV Bharat / state

Sylendra Babu: 36 ஆண்டு கால பணி நிறைவு.. தாயாருக்கு சல்யூட் செய்த சைலேந்திரபாபு!

author img

By

Published : Jul 1, 2023, 7:10 AM IST

36 ஆண்டு கால பணி நிறைவு, தாயாருக்கு சல்யூட் செய்த சைலேந்திரபாபு
36 ஆண்டு கால பணி நிறைவு, தாயாருக்கு சல்யூட் செய்த சைலேந்திரபாபு

காவல் துறை பணி அவ்வளவு எளிது கிடையாது என்றும், எனவே அதனை எதிர்கொண்டு வர வேண்டும் என சைலேந்திரபாபு கண்ணீர் மல்க விடைபெற்றார்.

சென்னை: 36 ஆண்டு காலமாக தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றிய டிஜிபி சைலேந்திரபாபு நேற்று ஓய்வு பெற்றார். இந்த நிலையில், அவருக்கு தமிழ்நாடு காவல் துறை சார்பில் பிரிவு உபச்சார நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காவல் துறை அணிவகுப்பு மரியாதையை டிஜிபி சைலேந்திரபாபு ஏற்றார்.

அப்போது குதிரைப்படை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, பெண்கள் கமான்டோ அணி, தமிழ்நாடு காவல் ஆண்கள் அணி, தமிழ்நாடு சிறப்பு அதிரடி படை, கடலோர காவல் படை, கொடி அணிவகுப்பு, காவல் இசை வாத்திய குழு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய ஐஏஎஸ் அமுதா, மதுரை வேளாண்மை கல்லூரியில் டிஜிபி சைலேந்திர பாபுவுடன் பணியாற்றியதாகவும், சிற்பி நிகழ்ச்சியின்போது தனக்கு தெரிந்த அதிகாரி ஒருவர் ஏதாவதொரு விஷயத்தை இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே கொண்டு செல்ல வேண்டு என்றால் டிஜிபி சைலேந்திர பாபுவை வைத்து வீடியோ பதிவிட்டால்போதும் என அவர் கூறியதாக பெருமிதம் கொண்டார்.

குறிப்பாக, கடலோர பாதுகாப்பு குழுமத்தில் சைலேந்திரபாபு பணியாற்றியபோது வெள்ளம் பாதித்த இடங்களுக்குச் சென்று பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார். அதாவது எந்த உயர் பொறுப்பில் அவர் இருந்தாலும் அதை பார்க்காமல் சென்று களத்தில் இறங்கி பணியாற்றுவார் என அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, “நான் டிஜிபியாக இருந்த கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாட்டில் சாதிக் கலவரங்கள் இல்லை, ரயில் கலவரங்கள் இல்லை, துப்பாக்கிச் சூடுகள் இல்லை மற்றும் போதைப் பொருள் ஒழிப்பில் தனிக் கவனம் செலுத்தப்பட்டது. ரவுடிகளை ஒழிக்க ரவுடிகள் வேட்டை ஆப்ரேஷன் நடத்தியதில் 3,047 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரவுடிகளின் பெயர்களையே மக்கள் மறந்துவிட்டனர்.

இதே போன்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் விற்கப்பட்ட போதை பொருட்களை ஒழிக்க கஞ்சா வேட்டை ஆபரேஷன் நடத்தப்பட்டு 20,040 வழக்குகள் பதியப்பட்டு, 28,594 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 67 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வரலாற்றில் முதல் முறையாக கஞ்சா வியாபாரிகள் மீது பொருளாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் 6,590 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, 2,861 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 914 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர். இதே போல நிதி நிறுவன மோசடி வழக்கில் பதியப்பட்ட 75 வழக்குகளில், 71 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 6 கோடி ரூபாய் ஏமாந்த பொதுமக்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது. 486 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என கூறினார்.

தாயாருக்கு சல்யூட்: காவல் நிலையங்களில் முதல் முறையாக வரவேற்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். காவலர்களுக்கு ஒரு வாரத்திற்கு ஒரு நாள் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. பெண் காவல் துறையின் வருகை 7 மணியில் இருந்து எட்டு மணி ஆக அறிவிக்கப்பட்டது. காவல் துறை பணி என்பது எளிமையாக இருக்காது. இந்த பணிகள் பல சிக்கலான சவால்களை சந்திப்பீர்கள். இந்த சவால்கள் உங்களை வேதனைக்கும் சோதனைக்கும் உட்படுத்தும் தைரியமாக எதிர் கொண்டு காவல் துறையை முன்னேற செய்ய வேண்டும் என்றார்.

மேலும் பேசிய அவர், வடநாட்டு தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகிறார்கள் என வதந்தி பரப்பும்போது தமிழ்நாட்டு காவல் துறையினர் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டார்கள். இரண்டு ஆண்டுகளில் காவல் நிலைய அளவிலும், மாவட்ட அளவிலும் மற்றும் மாநில அளவிலும் நல்ல தலைவர்களை உருவாக்கி உள்ளேன்.

அவர்கள் தமிழ்நாடு காவல் துறையை நல்ல கட்டத்திற்கு எடுத்துச் சொல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனது கடமையை நன்றாக முடித்துவிட்டேன் என்பதில் நன்றி உணர்வு மேலோங்கிறது என கண் கலங்கினார். இந்த நிகழ்ச்சியை 93 வயது நிரம்பிய என்னுடைய தாயார் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பார். இந்த நேரத்தில் அவருக்கு ஒரு சல்யூட் செய்கிறேன். நீதித் துறைக்கும், காவல் துறைக்கும் நெருக்கமான உறவு எப்போதும் உண்டு என கூறி விடை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:டிஜிபி, காவல் ஆணையர் பதவியேற்பு.. ரவுடியிசம் ஒழிக்கப்படும் - டிஜிபி உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.