ETV Bharat / state

பீகார் புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.. பட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்!

author img

By

Published : Jun 22, 2023, 6:09 PM IST

patna
பாட்னா

பீகார் மாநிலம் பாட்னாவில் நாளை நடைபெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று விமானம் மூலம் பாட்னா புறப்பட்டுச் சென்றார்.

சென்னை: 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சி தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பாஜகவிற்கு எதிராக ஒரு வலுவான எதிரணியை உருவாக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் வேலைகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாளை(ஜூன் 23) பீகார் தலைநகர் பாட்னாவில் தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேம்நாத் சோரன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், மகாராஷ்ட்ரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று(ஜூன் 22) சென்னையிலிருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு புறப்பட்டுச் சென்றார். இன்று மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் ஸ்டாலின் பாட்னாவுக்கு புறப்பட்டார். எதிர்க்கட்சிகள் கூட்டம் உள்பட இரண்டு கூட்டங்களில் கலந்து கொண்ட பிறகு, நாளை இரவு பாட்னாவிலிருந்து புறப்பட்டு சென்னை திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நாளை நடக்கவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டம் தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. திமுகவை பொறுத்தவரை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது. ஆளுநர் விவகாரம், இந்தி திணிப்பு விவகாரம் உள்ளிட்ட பலவற்றிலும் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த சூழலில் இக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின், நாடு முழுவதும் உள்ள பாஜக அல்லாத கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைத்து அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பை உருவாக்கினார். இக்கூட்டத்தின் முதல் மாநாடு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் தேசிய மற்றும் மாநில கட்சிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ED raids: தலைமைச்செயலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. புறவாசல் வழியாக அச்சுறுத்த முயற்சி என முதல்வர் ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.