ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஜேஎன்1 வகை கரோனா - முகக்கவசம் அணிந்தால் சிக்கல் இல்லை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 12:39 PM IST

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உலக எய்ட்ஸ் தினம் 2023

Minister Ma.Subramanian: ஜே என் 1 என்கிற வைரஸ் 4 நோயாளிகளிடம் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: “தமிழ்நாட்டில் ஓரிலக்க அளவில் கரோனா பாதிப்புகள் இருந்து வரும் நிலையில், புதிதாக ஜே.என்.1 என்கிற வைரஸ் இந்தியாவில் பரவலாக பரவி வருகிறது” என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில், 'உலக எய்ட்ஸ் தினம் 2023’ நிகழ்ச்சி எழும்பூர் நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் நேற்று (டிச.27) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், எச்.ஐ.வி மற்றும் பால்வினை தொற்று (Syphilis) கண்டறியும் பரிசோதனைக் கருவி அறிமுகப்படுத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, சமூகம் சார்ந்த தொண்டு நிறுவனம் மற்றும் எச்.ஐ.வி உள்ளோர் கூட்டமைப்புகளின் சேவையினை பாராட்டி, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, “ இந்திய அளவில் 23.48 லட்சம் மக்களும், தமிழ்நாட்டில் 1.30 லட்சம் மக்களும் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவிலான பாதிப்பு 0.24 சதவீதமாகவும், தமிழ்நாட்டில் 0.17 சதவீதமாக எச்.ஐ.வி பாதிப்பு உள்ளது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், எச்.ஐ.வி தொற்றினை கட்டுப்படுத்தும் பணியில் திறன்பட செயலாற்றி உள்ளது. அதற்காக, ஒன்றிய அரசு, 2022-23 ஆம் ஆண்டிற்கான பெரிய மாநிலங்கள் அளவில் சிறந்த செயல்பாட்டிற்கான முதலிடம் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது 1994 ல், Tamil Nadu State Aids Control Society (TANSACS) தொடங்கியதிலிருந்து பெறப்பட்ட முதல் விருது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.90 லட்சம் செலவில் பால்வினை தொற்று (Syphilis) கண்டறியும் பரிசோதனைக் கருவி (Testing kit) தமிழ்நாட்டில் முதல்முறையாக இன்று தொடங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 9 லட்சம் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பரிசோதிக்கப்படுவர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கரோனா பெருந்தொற்று கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாக பணிபுரிந்த டாக்டர் சௌமியா சுவாமிநாதன், கரோனா வைரஸ், உருமாற்றம் செய்து கொண்டே இருப்பதாக கூறினார். அந்தவகையில், தமிழ்நாட்டில் ஓரிலக்கு அளவில் பாதிப்புகள் இருந்து கொண்டு இருக்கிறது. XBB என்று சொல்லக்கூடிய ஒமைக்ரான் வைரஸின் உருமாற்றம் ஒரு சில பேருக்கு இருக்கிறது. ஆனால், இந்த வைரஸினால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. காய்ச்சல், சளி போன்ற உபாதைகளுடன், சில நாட்களில் குணமாகிவிடும் என்று கூறினார்.

தொடர்ந்து, பேசிய அவர், புதியதாக ஜே என் 1 வைரஸ் (JN.1) இந்தியாவில் பரவலாக பரவி வருகிறது. இந்த புதிய வைரஸ் இந்தியாவில் மட்டுமல்லாமல், ஆசிய நாடுகளான சிங்கப்பூர், இந்தோனிஷியா போன்ற பல்வேறு நாடுகளிலும் அதிகரித்து வருகிறது. கேரளா மாநிலத்தில் 100க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் பகுதிகளில், RT-PCR பரிசோதனை மூலம் பலவகைகளில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

நவம்பர் மாதம் இறுதியில் எடுக்கப்பட்ட வைரஸ் காய்ச்சல் தொடர்பாக, 56 மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு இருந்தது. அதில், 30 மாதிரிகளின் முடிவுகள் கடந்த வாரம், டிசம்பர் 18 ஆம் தேதி வந்துள்ளது. இதில், XBB என்கிற வைரஸ் 24 நோயாளிகளுக்கு, BA1 என்கிற வைரஸ் 2 நோயாளிகளுக்கு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், JN.1 என்கிற வைரஸ் 4 நோயாளிகளிடம் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த நான்கு பேரும் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருவள்ளுர் போன்ற மாவட்டங்களில் இருந்து சிகிச்சை பெற்று வருபவர்கள். National University of Singapore உள்ள மருத்துவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். இந்த வைரஸ் 3 நாட்களுக்கு மட்டும் பாசிட்டிவ் என்று வருகிறது. 4ஆம் நாள் நெகட்டிவ் என்று வருவதாக அம்மருத்துவர்கள் தெரிவித்துள்ளானர். இதனால், இந்த வைரஸ் குறித்து பெரிய அளவில் அச்சப்பட வேண்டாம் என்று கூறினார்.

முன்னதாக, பொதுசுகாதாரத்துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள், முதியோர்கள், இணை நோய் உள்ளவர்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அதனை கடைப்பிடித்தால் வைரஸ் பாதிப்புகள் தீவிரமாக வாய்ப்புகள் இல்லை” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: மெரினா கடற்கரை உள்ளிட்ட சென்னையின் 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.