ETV Bharat / state

அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டமா? - நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 5:49 PM IST

Amar prasad reddy
அமர் பிரசாத் ரெட்டி

Amar Prasad Reddy: பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை தற்சமயம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தை அகற்றிய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்தாகவும் கூறி மாநில பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவராக உள்ள அமர் பிரசாத் ரெட்டியை கடந்த மாதம் 21ஆம் தேதி கானத்தூர் போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் பதிவாகி இருந்த மேலும் இரண்டு வழக்குகளிலும் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனது கணவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாககக் கூறி, அதற்கு தடை விதிக்கக் கோரி அமர் பிரசாத் ரெட்டியின் மனைவி நிரோஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ஜேசிபி இயந்திரம் உடைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடந்த இடத்தில் தனது கணவர் இல்லை என்றும், தமிழக அரசு மற்றும் ஆளும் கட்சியான திமுகவின் சமூகவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதால், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தனது மனுவில் நிரோஷா தெரிவித்திருந்தார்.

போலி பாஸ்போர்ட் வழங்கிய விவாகரத்தில் உளவுத்துறை முன்னாள் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு தொடர்பு இருப்பதாக புகார் கூறியதால், அவரது நண்பரான தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் சொல்லி பொய் வழக்குப் பதிவு செய்து தனது கணவரை குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தனது மனுவில் நிரோஷா கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, தனது கணவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு விடுவார் என்கிற அச்சத்தில், முன்கூட்டியே வழக்கு தொடர்ந்திருப்பதாக தெரிவித்தார். மேலும், தற்போதைய நிலையில் அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்னதாகவே தொடரப்பட்ட வழக்கு எனக் கூறி, நிரோஷாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: காற்று தரக் குறியீடு என்றால் என்ன? - டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுபாடு எந்த வகையில் உள்ளது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.