ETV Bharat / state

2 ஆண்டுகளில் நீர் நிலைகளில் மூழ்கிய 1,472 பேர் மீட்பு - தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தகவல்!

author img

By

Published : May 15, 2023, 6:07 PM IST

Disaster
Disaster

கடந்த இரண்டு ஆண்டுகளில் நீர் நிலைகளில் மூழ்கிய ஆயிரத்து 472 பேர் மீட்கப்பட்டு உள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை தெரிவித்து உள்ளது.

சென்னை : கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் நீர் நிலைகளில் மூழ்கிய ஆயிரத்து 472 பேரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினர் உயிருடன் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் நீரில் மூழ்கிய 3 ஆயிரத்து 33 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மெரினா கடற்கரையில் மட்டும் நீரில் மூழ்கிய 42 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, 40 பேர் சடலமாக மீட்டுள்ளதாகவும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "நீரை கண்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே அலாதி பிரியம் தான். ஆறு, குளம், குட்டை, ஏரி, கிணறு, கிளை வாய்க்கால்கள், கடல் என அனைத்து நீர் நிலைகளைக் கண்டாலும் இறங்கி குளிக்கும் ஆர்வம் அனைவருக்குமே உண்டு.

அப்படி நீர் நிலைகளில் சந்தோசத்தின் உச்சத்திற்குச் சென்ற பலர் குளிக்கும்போது அதன் அபாயத்தன்மையை அறியாமல், நீரில் அடித்து செல்லப்பட்டு மரணிக்கும் சோக நிகழ்வும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் லைக்குக்காக மட்டுமே அபாயகரமான நீர் நிலைகள் அருகே சென்று செல்ஃபி எடுக்கும்போதும் தவறி விழுந்து உயிரிழக்கின்றனர்.

இதுமட்டுமின்றி பல பிரச்னைகளில் உயிரை மாய்த்துக்கொள்ள பொதுமக்கள் நீர் நிலைகளில் குதித்து மரணிக்கவும் செய்கின்றனர். அவ்வாறு நிகழும் மரணங்களைத் தடுப்பதற்காக தமிழக காவல்துறையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி குழுவினர் மற்றும் கடலோர பாதுகாப்புக் குழுமம், உயிர்காக்கும் தடுப்புப் பிரிவு ஆகியோர் தீவிரமாக கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு நீரில் மூழ்குபவர்களை மீட்டு வருகின்றனர்.

இருப்பினும் தொடர்ச்சியாக நீரில் மூழ்கி மரணிக்கும் சம்பவங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 2021, 2022, மற்றும் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீர் நிலைகளில் மூழ்கி உயிருக்குப் போராடுவதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு 5 ஆயிரத்து 412 அழைப்புகள் வந்துள்ளன.

அதில் நீரில் மூழ்கிய நிலையில் போராடிய ஆயிரத்து 472 பேர் உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளனர். இது ஒரு புறமிருக்க கடந்த இரண்டரை வருடங்களில் மட்டும் நீர் நிலைகளில் அடித்துச் செல்லப்பட்ட 3 ஆயிரத்து 33 பேர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் குழுக்களாக வந்து நீரில் குளித்து குதூகலமாக கொண்டாடுவது வழக்கம். இதைத் தடுப்பதற்காக சிசிடிவி கேமராக்கள், உயிர்காக்கும் தடுப்புப் பிரிவு, பீச் பக்கி உள்ளிட்ட பல தொழில் நுட்பங்களை கொண்டு உயிரிழப்புகளைத் தடுக்க முயற்சி செய்தும் ராட்சத அலையில் சிக்கி மரணிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

மெரினா கடற்கரை அலையில் சிக்கியதாக இரண்டரை வருடங்களில் 90 அவசர அழைப்புகள் வந்திருப்பதாகவும், அதில் 42 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, 40 பேர் சடலமாக மீட்டுள்ளனர்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையக் குழு ஆய்வு - பராமரிப்புப் பணிகள் குறித்து கண்காணிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.