ETV Bharat / state

தமிழ்நாடு பட்ஜெட் 2022: கல்விக்கான எதிர்பார்ப்பு என்ன?

author img

By

Published : Mar 17, 2022, 7:28 PM IST

கல்விக்கான எதிர்பார்ப்பு என்ன?
கல்விக்கான எதிர்பார்ப்பு என்ன?

தமிழ்நாட்டின் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் எல்லா குழந்தைகளுக்கும் எல்லாத் திட்டங்களும் சென்றடைய பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் தமிழ்நாடு செயற்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் நாளை (மார்ச் 18) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. திமுக அரசு அமைந்ததும் தாக்கல் செய்யப்படக்கூடிய முதல் முழுமையான பட்ஜெட் என்பதால் கல்வி அமைப்பினரிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த பட்ஜெட்டில் கல்விக்கு என்ன தேவை என அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் தமிழ்நாடு செயற்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி நம்மிடம் கூறுகையில், "கல்வி என்பது அடிப்படை ஆதாரம். அதற்கு செய்யக்கூடிய செலவுகளை மூலதனமாகத் தான் பார்க்க வேண்டும். எனவே, தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் கல்விக்கு அதிகப்படியாக நிதிகள் ஒதுக்கப்பட வேண்டும்.

கல்விக்கான எதிர்பார்ப்பு என்ன?

ஆசிரியர்கள் பற்றாக்குறை

வரும் பட்ஜெட்டில் கல்வி சார்ந்த துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு வருமானத்திற்கு தனியாக ஒரு பட்ஜெட் ஒதுக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறையைப் பொறுத்தவரை ஆசிரியர்கள் பற்றாக்குறை, இடப் பிரச்னைகள், கட்டடப் பிரச்னைகள், தூய்மைப் பணியாளர்கள் நியமனம், பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் இப்படி எல்லா இடங்களிலும் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு தொடக்கப்பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு வகுப்புக்கும் ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் கல்வித்தரம் உயரும்.

வாடகை கட்டடம்

முதுகலைப்படிப்புகளில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படாமல் உள்ளனர். பல்வேறு பள்ளிகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. சில பள்ளிகளில் கட்டடங்களை இடிக்கக்கூடிய சூழ்நிலையில் உள்ளது. இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெரும் பாதிப்படைகின்றனர். எனவே, அரசு பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் நியமனமும் கட்டமைப்புகளை உறுதிப்படுத்தவும் வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறையில் வெளியிடப்படும் திட்டங்கள் அனைத்து கிராமங்களுக்கும் சமவாய்ப்பில் சென்றடைவது இல்லை. எல்லா குழந்தைகளுக்கும் எல்லாத் திட்டங்களும் சென்றடைய பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்க வேண்டும்.

தனியார் மயம்

அரசு மொத்த பட்ஜெட்டில் 30 விழுக்காடு கல்விக்காக ஒதுக்க வேண்டுமென அகில இந்திய பாதுகாப்புக்கல்வி அமைப்புத்தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அப்படி ஒதுக்கும்பட்சத்தில் அரசு கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளின் வாழ்வியலில் நல்ல எதிர்காலமும், சிறந்த சமுதாயமும் உருவாகும். தனியார் மயம் வளர்ந்துள்ள நிலையில் அதைத் தவிர்த்து அரசுத் துறையைப் பலப்படுத்த வேண்டும் என்றால், வரும் பட்ஜெட்டில் அதிகப்படியாக நிதிகள் கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2022 - தொழில்துறையினரின் கோரிக்கைகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.