தமிழ்நாடு பட்ஜெட் 2022 - தொழில்துறையினரின் கோரிக்கைகள்

author img

By

Published : Mar 17, 2022, 6:12 PM IST

Updated : Mar 17, 2022, 7:24 PM IST

தமிழ்நாடு பட்ஜெட் 2022- தொழில் துறையினரின் கோரிக்கைகள்

தமிழ்நாட்டின் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் மூலப்பொருட்களின் விலை உயர்வினைக் கட்டுப்படுத்த குழு அமைத்து, அதன் அறிக்கையினை மத்திய அரசிடம் தாக்கல் செய்ய இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என கோவை தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர்: தமிழ்நாடு பட்ஜெட் நாளை(மார்ச் 18) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. திமுக அரசு அமைந்ததும் தாக்கல் செய்யப்படக்கூடிய முதல் முழுமையான பட்ஜெட் என்பதும், நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் தாக்கல் செய்யும் பட்ஜெட் என்பதாலும் தொழில் அமைப்பினரிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொழில் நகரான கோவையில் தமிழ்நாடு பட்ஜெட்டினை தொழில் அமைப்புகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். குறிப்பாக அன்னூர், சூலூர் பகுதியில் தொழில் துறைக்காக நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான தொகையினை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; நிலம் கிடைத்துவிட்டால் பெரிய நிறுவனங்களின் முதலீடுகள் இருக்கும் எனவும் எதிர்பார்ப்பதாக கொடிசியா தொழில் அமைப்பினர் தலைவர் ரமேஷ் பாபு தெரிவித்தார்.

மேலும் கடந்த 2 ஆண்டுகளாக பெரும் பிரச்னையாக இருக்கும் மூலப்பொருள் விலை உயர்வைக்கட்டுப்படுத்த தனியாக கமிட்டி அமைத்து, அதன் மூலம் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்து, மூலப்பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும்; இதைத் தமிழ்நாட்டிலிருந்து பட்ஜெட் நேரத்தில் செய்தால் இந்தியா முழுவதற்கும் எடுத்துகாட்டாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

சிறு குறு தொழில்களுக்குப் பிணை இல்லா கடன்

தமிழ்நாடு பட்ஜெட் 2022- தொழில் துறையினரின் கோரிக்கைகள்
தமிழ்நாடு பட்ஜெட் 2022- தொழில் துறையினரின் கோரிக்கைகள்

மேலும் சாலை வசதி மற்றும் புற வழிச்சாலை திட்டங்களை விரைவுபடுத்தினால் , வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும் எனவும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இருக்கும் நிலையில், இங்குப் பெரிய முதலீடுகள் வர வாய்ப்பு இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

சிறு,குறு தொழில்களைப் பொறுத்தவரை, கரோனா பெரும்தொற்று காரணமாக கடும்பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாகவும், தொழில் முனைவோருக்கு தாய்கோ வங்கி மூலம் பிணை இல்லா கடன் வழங்க வேண்டும் குறுந்தொழில்களுக்கு மானியம் கொடுத்து, தனியாகத் தொழில்பேட்டை அமைக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு ஊரக மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத் தலைவர் ஜேம்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட்டில் பின்னலாடையின் தலைநகராக விளங்கும் திருப்பூரின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என தொழிற்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேற்று மாநிலத்தாருக்கும் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பட்ஜெட் 2022 - தொழில்துறையினரின் கோரிக்கைகள்

இந்திய அளவில் பின்னலாடைத் துறையில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்திலிருந்து வருகிறது. இங்கு ஆண்டுக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி எனப் பின்னலாடை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பை வழங்கும் துறையாக ஜவுளி உற்பத்தித்துறையானது விளங்கி வருகிறது. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பிகார், ஒடிசா, உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கும் வேலை வழங்கும் நகராகத் திருப்பூர் விளங்குகிறது. பருத்தி விலை ஏற்றம் காரணமாக மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், புதிதாக ஏற்றுமதி ஆர்டர்கள் பெறப் பின்னலாடைத் துறையினர் தயங்கி வரும் நிலையில், உள்நாட்டு உற்பத்தி பெருமளவு கைகொடுத்து வருகிறது.

திருப்பூரில் பெருகும் மக்கள் தொகை!

உள்நாட்டுத் தேவைக்கான ஆர்டர்கள் மூலம் தனது பொலிவைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. மேலும் பின்னலாடை ஏற்றுமதிக்கு ஏராளமான வர்த்தக விசாரணைகள் தொடர்வதால் மீண்டும் 2022ஆம் ஆண்டில் ஏற்றுமதியில் புதிய மைல்கல்லினை திருப்பூர் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப நாளுக்கு நாள் தொழிலாளர்களும் திருப்பூரை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இதனால் மக்கள்தொகை நெருக்கம் மிகுந்த பகுதியாகத் திருப்பூர் வளர்ந்து வருகிறது. இங்கே இருக்கும் மக்கள் அடர்த்திக்கு ஏற்ப குடியிருப்புகள் இல்லாதது பெரும்பின்னடைவாக அமைந்துள்ளது.

மாநில அரசு தொழிலாளர்களுக்குத் தேவையான குடியிருப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என்பது மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. அரசின் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளைத் தொழிலாளர்களுக்கு விரைந்து வழங்க வேண்டும்.

பின்னலாடை ஆராய்ச்சி மையம் அமைக்கக் கோரிக்கை

புதிதாக மேலும் பல இடங்களில் குடியிருப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறையினர் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் பின்னலாடைத் துறையில் புதுமைகளைக் கொடுத்தால் மட்டுமே உலக அரங்கில் நிலைத்து நிற்க முடியும் என்பதால், பின்னலாடைத் துறைக்கு எனப் பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கூடம் அமைத்துத்தர வேண்டும் என்ற கோரிக்கையையும் தொழில் துறையினர் முன்வைத்துள்ளனர்.

இதன்மூலம் உலகில் எந்தப்பகுதியில் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டாலும் அதனை அறிந்து புதிய முயற்சிகள் மேற்கொள்வதன் மூலம் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும் எனவும்; பயிற்சி மையங்கள் மூலம் உடனுக்குடன் தொழிலாளர்களுக்குப் பயிற்சி வழங்கி உற்பத்தியைப் பெருக்க முடியும் என்பதால், நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள பின்னலாடைத் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் அமைத்துத் தரத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கையுடன் காத்திருப்பதாகத் திருப்பூர் தொழில்துறையினர் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட் 2022-23 நாளை தாக்கல்!

Last Updated :Mar 17, 2022, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.