ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற துணை நில்லுங்கள்: முதலமைச்சர் வேண்டுகோள்!

author img

By

Published : Apr 23, 2023, 5:27 PM IST

CM STALIN
முதலமைச்சர் ஸ்டாலின்

2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் தான், நாட்டை காப்பாற்ற முடியும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: திமுக விவசாய அணியின் துணைச் செயலாளர் நல்ல சேதுபதியின் இல்லத் திருமண விழா, கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், "1967-க்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பேரறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்றது. பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக சட்டமன்றத்திற்கு முதல் முறையாக வந்து, சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். எனவே, இன்றைக்கு நடைபெற்றிருக்கும் இந்த சீர்திருத்த திருமணம் சட்டப்படி முறைப்படி செல்லுபடியாகும் என்கிற அங்கீகாரத்தோடு நடந்திருக்கிறது.

எந்த தேர்தல் வந்தாலும் அதில் நான்தான் போட்டியிடுவேன், எனக்கு வாய்ப்பு வேண்டும் என்று நல்லசேதுபதி உரிமையோடு கேட்பார். அவ்வாறு வரும் நேரங்களில் கலைஞர் கருணாநிதி தலைமைக் கழகத்துக்கு அழைத்து, அவரை சமாதானம் செய்து திருப்தியாக அனுப்பி வைப்பார். இயக்கத்திற்காக தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு சிறந்த செயல்வீரராக நல்லசேதுபதி உள்ளார்.

கருணாநிதி நூற்றாண்டு விழா ஜூன் 3ம் தேதி தொடங்கும் நிலையில், ஒரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, அதையும் தாண்டி, 2024-ல் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஆங்காங்கே பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும் என்று ஒரு இலக்கு வைத்திருக்கிறோம். எனவே, அந்த இலக்கை நாம் நிறைவேற்றினால்தான் இந்த நாட்டை நாம் காப்பாற்ற முடியும். அதை மனதில் நீங்கள் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

தேர்தல் நேரத்தில் அளித்த அத்தனை உறுதி மொழிகளையும் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். நிதிநிலை ஒரு கொடுமையான பற்றாக்குறையாக இருந்தாலும், இன்றைக்கு மத்திய அரசு நமக்குத் தேவையான அளவிற்கு துணை நிற்காவிட்டாலும், அதை எல்லாம் தாண்டி அதை எல்லாம் மீறி, இன்றைக்கு இந்தியாவிலேயே ஒரு சிறந்த மாநிலமாக – முதலிடத்திற்கு வரும் மாநிலமாக நம்பர் ஒன் முதலமைச்சர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் ஒரு மாநிலமாக நாம் இன்றைக்கு வளர்ந்து வந்திருக்கிறோம். வளர்ந்து வந்து கொண்டிருக்கிறோம்.

என்னென்ன உறுதிமொழிகள் தந்தோம். பெண்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். ஆட்சிக்கு வந்தவுடன், நாம் போட்ட முதல் கையெழுத்து இதுதான். அதேபோல பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லும் மாணவியர்களுக்கு அவர்களுடைய கல்வி உதவித் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதுவும் இன்று வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் மாதம் வழங்கப்படும் என்று அறிவித்தோம். அதையும் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்ற வேண்டும் என்றுதான் நாங்கள் முடிவு செய்தோம். ஆனால், இருந்த நிதிநிலை சூழ்நிலை, அதை எல்லாம் இன்றைக்கு முறைப்படுத்தி வகைப்படுத்தி, அதை எல்லாம் ஓரளவுக்கு சீர் செய்து, அதற்குப் பிறகு இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்திருக்கிறோம். வருகிற செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள் அன்று அந்த உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படவிருக்கிறது.

2024-இல் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அந்த தேர்தலில் நாம் முழுமையாக அகில இந்திய அளவில் வெற்றி பெற்றால்தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்ற ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

திராவிட ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் துணை நிற்க வேண்டும். அதே நேரத்தில் மீண்டும் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். இந்தியாவை காப்பாற்றுவதற்கு நீங்கள் எல்லாம் இப்போது தயாராக இருக்க வேண்டும். அதற்கு உங்களை ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். 2024ஆம் ஆண்டு வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நம்முடைய அணிக்கு நீங்கள் ஏற்படுத்தித் தருவதற்கு துணை நில்லுங்கள்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 12 மணி நேர வேலை மசோதா - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.