ETV Bharat / state

வெறுப்பின் நெருப்பில் உருவான செடி நான்... விரக்தியில் பேசுகிறாரா ரஜினி? சிறப்புப் பார்வை!

author img

By

Published : Aug 1, 2023, 6:38 PM IST

விரக்தியின் உச்சத்தில் பேசுகிறாரா ரஜினி
விரக்தியின் உச்சத்தில் பேசுகிறாரா ரஜினி

அண்மையில் நடந்த 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதும், அது குறித்து ரஜினியின் ரசிகர்களின் கருத்து குறித்த சிறப்புப் பார்வை...

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 45 ஆண்டுகாலம் தமிழ்த் திரையுலகை தனது அசாத்திய ஸ்டைலால், கோலூன்றி வருபவர். பாலச்சந்தர் என்ற சிற்பியால் செதுக்கப்பட்ட வைரம் இவர். தனது திரையுலக வாழ்க்கையை வில்லனாக தொடங்கிய ரஜினிகாந்த், இன்று உலகளவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளார். ஆனால், சமீப காலமாக இவரது படங்கள் விமர்சன ரீதியாக சரியாக அமையவில்லை என்பதே உண்மை.

ரஜினியின் படங்கள் சரியாக போகாத நிலையில், ரஜினியின் காலம் முடிந்துவிட்டது எனப் பலரும் கூறிக்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க அடுத்து சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்ற சர்ச்சைகளும் ஓய்வதாக இல்லை. அடுத்த சூப்பர் ஸ்டார் தாங்கள் விரும்பும் நடிகர் தான் என்று மற்ற நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டு வருகின்றனர். இன்னும் ஒரு சில நடிகர்களை குட்டி ரஜினி என்றும் கூறிவருகின்றனர்.

சூப்பர் ஸ்டாரின் மன உளைச்சல்: இந்நிலையில் அண்மையில் நடந்த ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படும் நடிகர்களை மறைமுகமாக சாடியிருந்தார். இதுதான் தற்போது பேசு பொருளாகியுள்ளது. பொதுவாக மேடைகளில் பக்குவமான பேச்சை வெளிப்படுத்தும் ரஜினிகாந்த், தற்போது பேசியுள்ளது விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக ரஜினியின் ரசிகர்கள் கருதுகின்றனர்.

இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமா மார்க்கெட்டை பொறுத்தவரை ரஜினிதான் எப்போதுமே நம்பர் ஒன். ரஜினிகாந்தின் படங்களின் வசூலை அவருடைய படம்தான் முறியடிக்கும். ஆனால், தற்போது ரஜினியின் படங்கள் சரியாக வசூல் ரீதியாக அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பது உண்மை தான். மேலும், இது ரஜினிக்கு சற்று மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும் என்பது உண்மை தான் என்பது ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் கருதப்படுகிறது.

ரஜினிகாந்தின் பேச்சு: இதனிடையே ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், "இந்த சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை எனக்கு எப்போதும் தொல்லை தான். 1977ல் எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தபோது, சார் எனக்கு வேண்டாம் என்றேன். உடனே, சிலர் ரஜினி பயந்துட்டாரு என்று சொன்னார்கள். நான் பயப்படுவது இரண்டே இரண்டு பேருக்கு தான். ஒன்று கடவுள், மற்றொன்று நல்ல மனிதர்கள்.

அப்போது இருந்த காலகட்டத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருந்தார். நடிகர் கமல் உச்சத்தில் இருந்தார். இதனால் எனக்கு வேண்டாம் என்றேன். ஏனென்றால், அவர்கள் மீது இருந்த மரியாதை. திரையுலகில் எல்லோருக்கும் விருப்பு, வெறுப்பு உண்டு. ஆனால், திரையுலகில் எனக்கு இருந்த வெறுப்பு சுனாமியைப் போன்றது. இப்பொழுது இருக்கும் 2k கிட்ஸ்களுக்கு இதெல்லாம் தெரியாது" என்று கூறினார்.

"தற்போது இருப்பது போன்று சோஷியல் மீடியா அப்போது இருந்ததில்லை. அதனால், இதெல்லாம் வெளியே தெரியாமல் போனது. அந்த வெறுப்பில் இருந்து உருவான செடி நான். இந்த செடியை காப்பாற்றியது கடவுள். என்னுடைய உழைப்பு. இதனால் நான் சம்பாதித்தது என் ரசிகர்கள்" என்று கூறினார் ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டாரின் குட்டி கதை: தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், "நான் ஸ்டைலாக நடிக்கத் தொடங்கியபோது, தாய்க்குலம் தியேட்டருக்கு வந்திருச்சுன்னு சொன்னா, யானை வந்து கரும்பு தோட்டத்தில் புகுந்தது மாதிரி அவ்வளவு தான்... எல்லாத்துறையில் வெறுப்பு இருப்பது போன்று திரைத்துறையில் நான் வெறுப்பின் நெருப்பில் வளர்ந்து வந்தவன். அந்த நெருப்பு எனக்குள் இன்னும் ஆறவில்லை. விலங்குகளில் மிகவும் குறும்பு பிடித்தது குரங்கு, அதுபோல பறவைகளில் காகம். பருந்து உயரத்தில் பறந்துக்கொண்டிருக்கும். காகம், ஒரு இடத்தில் இருக்காது. அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருக்கும்.

சின்ன சின்ன பறவையான புறா, குருவி ஆகியவற்றைக் கொத்தும். பின்பு பருந்து பறப்பதை காகம் பார்த்துவிட்டு தனது றெக்கையை படபடவென அடித்து மேலே பறந்து பருந்து உயரத்திற்குச் செல்லும். ஆனால், உயர பறந்து கொண்டிருக்கும் பருந்து தனது சிறகை அடிக்காமல் மிதந்துக்கொண்டிருக்கும். காகம் மேலே போய் பருந்தை கொத்தும். அப்போதும், பருந்து காகத்தை ஒன்றும் செய்யாது. இன்னும் கொஞ்சம் உயர பறந்து விடும்.

ஆனால், காகமும் பருந்து உயரத்திற்கு பறக்க ஆசைப்பட்டு மேலே போக பார்க்கும். பறக்க முடியாமல் கீழே விழுந்து விடும். எனவே, நம்மை யாராவது எதிர்த்தால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் உழைத்து முன்னேறி போய் கொண்டே இருக்க வேண்டும். உடனே சமூக ஊடகங்களில் ரஜினிகாந்த் அவரை காகமாக சொன்னார், இவரை பருந்தாக சொன்னார் என்று ஏதாவது எழுதுவார்கள். குரைக்காத நாயுமில்லை, குறை சொல்லாத வாயுமில்லை. ஆகமொத்தத்தில் இந்த ரெண்டும் சொல்லாத ஊருமில்லை. எனவே, நாம் நம்முடைய வேலையை பார்த்துக்கொண்டு போய்க்கிட்டே இருப்போம்" என்று பேசியிருந்தார்.

ரசிகர்களின் கருத்து: ரஜினி ஒருபோதும் இப்படி பேசக்கூடிய ஆள் கிடையாது என்கின்றனர் ரஜினியின் ரசிகர்கள் மற்றும் அவரை நன்கு அறிந்தவர்கள். தொடர்ந்து தனது படங்களின் தோல்வி, அரசியல் தோல்வி, மகள்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகள், அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் வெளிப்பாடு தான் ரஜினியின் இந்தப் பேச்சு என்றும் கூறுகின்றனர்.

ஏனெனில் இதே ரஜினிகாந்த் தான், 2003ம் ஆண்டு சாமி படத்தின் வெற்றிவிழாவில், தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் இல்லை என்றும்; கலெக்டர், முதலமைச்சர் போன்று சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது ஒரு இடம் என்றும் கூறியிருந்தார்.

அந்தந்த காலகட்டத்தில் யார் யார் வருகிறார்களோ அவர்கள் அந்த பட்டத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்றும்; அவர்கள் போன பிறகு அந்த இடம் அங்கேயே இருப்பதாகவும் கூறினார். அந்தந்த காலகட்டத்தில் யார் அதிக வெற்றிப்படம் கொடுக்கிறார்களோ, யாருடைய படம் நிறைய வசூல் செய்கிறதோ, யாருடைய படத்தை அதிக மக்கள் விரும்பி பார்க்கிறார்களோ, யாருடைய படம் வாங்கினால் நஷ்டம் ஏற்படாதோ அவர்தான் சூப்பர் ஸ்டார் என்று பேசியிருந்தார்.

மேலும், எல்லாருமே சூப்பர் ஸ்டார் தான் என்றும், பேரும் புகழும் மணலில் வீடு கட்டுவது போன்றது என்றும் பேசியிருந்தார். ஆனால், இப்போது சூப்பர் ஸ்டார் போட்டியில் இருப்பவர்களை காகம் என்று பேசியிருப்பது அவரது வெறுப்புணர்வை காட்டுவதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள்‌ பரவி வருகின்றன. ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட ரஜினிகாந்த்தின் இந்த முதிர்ச்சியற்ற பேச்சு அவரது பேருக்கும், புகழுக்கும் சரியல்ல என்பதே அவரை மதிக்கும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படிங்க: மதுரை சிறை நூலகத்திற்கு ரூ. 50ஆயிரம் மதிப்பில் புத்தகங்கள்.. இனி மதுவுக்கு ‘நோ’.. அசத்தும் 'ஜெயிலர்' ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.