ETV Bharat / state

Sudden Downpour in chennai: மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வுசெய்த ஸ்டாலின்

author img

By

Published : Dec 31, 2021, 3:29 PM IST

Updated : Dec 31, 2021, 6:55 PM IST

மழை
மழை

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட சீதாம்மாள் காலனி, டாக்டர் கிரியப்ப சாலை, திருமலை பிள்ளை சாலை – பசுல்லா சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளையும், மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்புப் பணிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து, மழைநீரை அகற்றிடும் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

சென்னை: சென்னையில் நேற்று (டிசம்பர் 30) மாலை திடீரென கனமழை பெய்தது. இதனால் பல்வேறு முக்கியச் சாலைகள், சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள். மாநகராட்சி அலுவலர்கள் மழை நீரை வெளியேற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஸ்டாலின் திருச்சியிலிருந்து சென்னை திரும்பியவுடன் நேரடியாக பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்று மழைநீர் அகற்றும் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை, பெரியமேடு சைடனஹாம்ஸ் சாலை, பாரிமுனை பிரகாசம் சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் நள்ளிரவில் ஆய்வுசெய்தார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று (டிசம்பர் 31) தேனாம்பேட்டை மண்டலம், சீதாம்மாள் காலனி, டாக்டர் கிரியப்ப சாலை, கோடம்பாக்கம் மண்டலம், திருமலை பிள்ளை சாலை – பசுல்லா சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் மோட்டார் பம்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும், மழைநீர் அகற்றும் பணிகளை ஸ்டாலின் பார்வையிட்டு, பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வுசெய்த ஸ்டாலின்

செய்தியாளருக்குப் பேட்டி அளித்த ஸ்டாலின்

கேள்வி: எதிர்பாராதவிதமாக இவ்வளவு பெரிய மழை பெய்திருக்கிறதே, அது பற்றி?

பதில்: வானிலை மையம் பொதுவாக முன்கணிப்பு செய்து தகவல் கொடுப்பார்கள். ஆனால், இந்த முறை அவர்களாலேயே கணிக்க முடியவில்லை. அதனால் எதிர்பாராதவிதமாக திடீரென்று பேய் மழை பெய்திருக்கிறது.

ஆகவே, தேங்கியிருந்த மழை தண்ணீரை எப்படியாவது சரிசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், நான் திருச்சியிலிருந்து வந்தவுடன் நேரடியாக பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள war room-க்கு சென்று, மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கை குறித்து கலந்து பேசி என்னென்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்டறிந்தேன்.

மழைநீர் தேங்கியுள்ள இடங்களில், ஆங்காங்கே மோட்டார் பம்புசெட் வைத்து மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டுவருகிறது. அது ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கிறது. நிச்சயமாக இன்றைக்குள் எல்லாம் சரிசெய்யப்பட்டுவிடும்.

கேள்வி: திடீர் மழை என்னும்போது, வானிலை மையம் முன்கணிப்பு அளிப்பதில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? உபகரணங்கள் மாற்றுவதற்கு மத்திய அரசிடம் ஏதாவது கோரிக்கை அளிக்கப்படுமா?

பதில்: அது அவர்கள் செய்ய வேண்டிய வேலை. இருந்தாலும், நீங்கள் சொன்னதற்காக, தமிழ்நாடு அரசு இது குறித்து மத்திய அரசுக்கு நினைவுபடுத்தும்.

கேள்வி: மழைநீர் தேங்கி இருக்கக்கூடிய இடங்களிலேயே, மழைநீர் மீண்டும் தேங்கும் சூழ்நிலை இருக்கிறது. திட்டமிடுதலில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா?

பதில்: கடந்த பத்து ஆண்டுகளாகப் பணிகளை முறையாகச் செய்யாமல் குட்டிச்சுவர் ஆக்கி வைத்திருக்கிறார்கள் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதை இப்போது விமர்சனம் செய்வதற்கு நாங்கள் தயாராகயில்லை. மழைநீர் தேங்குவதைச் சரிசெய்ய வேண்டும். அடுத்த மழைக்காலம் வருவதற்குள் இதை நாங்கள் நிச்சயமாகச் சரிசெய்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளும் நடந்துவருகின்றன.

நேற்று மட்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த எதிர்பாராத கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய ஒவ்வொரு அலுவலரும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். சீரமைப்புப் பணிகளை நானும் நேரடியாகவே ஆய்வுசெய்து கண்காணித்துவருகிறேன். விரைவில் நிலைமை சீரடையும் என்று கூறினார்.

முதலமைச்சரின் ஆய்வின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வேலு, கருணாநிதி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: என்னை நேரில் சந்திப்பதைத் தவிருங்கள் - ஸ்டாலின் வேண்டுகோள்

Last Updated :Dec 31, 2021, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.