ETV Bharat / state

வங்ககடலில் நிலை கொண்டுள்ள புயல்: யாராருக்கு என்னென்ன எச்சரிக்கைகள் - வானிலை மையம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 7:52 PM IST

வங்ககடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று(டிச.2) காலை புயலாக வலுபெற்ற நிலையில், நாளை(டிச.3) மற்றும் நாளை மறுநாள்(டிச.4) மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் தென் மண்டல் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்ககடலில் நிலை கொண்டுள்ள புயல்: மீனவர்களுக்கான சிறப்பு எச்சரிக்கை
வங்ககடலில் நிலை கொண்டுள்ள புயல்: மீனவர்களுக்கான சிறப்பு எச்சரிக்கை

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று(டிச.2) காலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 440 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 420 கி.மீ., தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) தெற்கு- தென்கிழக்கே சுமார் 540 கி.மீ., தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 650 கி.மீ., தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 650 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

வங்ககடலில் நிலை கொண்டுள்ள புயல்: மீனவர்களுக்கான சிறப்பு எச்சரிக்கை
வங்ககடலில் நிலை கொண்டுள்ள புயல்: மீனவர்களுக்கான சிறப்பு எச்சரிக்கை

இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை(டிச.3) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4-ஆம் தேதி அன்று முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டிய வடதமிழ்நாடு கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு கடலோரப் பகுதிகளையொட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12-2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலாக மாறும் பட்சத்தில் நாளைய(டிச.3) மழை நிலவரம்: இது குறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று(டிச.2) காலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை(டிச.3) புயலாக மாறும் பட்சத்தில், நாளை டிசம்பர் 3-ஆம் தேதி அன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிககனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாளுக்கான(டிசம்பர்.04) மழை நிலவரம்: இதனைத் தொடர்ந்து டிசம்பர் 4-ஆம் தேதி அன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என தெரிவித்தார்.

தரைக்காற்று நிலவர எச்சரிக்கை: திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நாளை(டிச.3) பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதைத் தொடர்ந்து டிசம்பர் 4-ஆம் தேதி அன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதனால் நாளை(டிச.3) மற்றும் நாளை மறுநாள்(டிச.4) வரை வங்ககடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்ககூடும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: நாளை(டிச.3) காலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், நாளை(டிச.3) மாலை முதல் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, டிசம்பர் 4-ஆம் தேதி மாலை முதல் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட ஆந்திர கடலோரப் பகுதிகள்: டிசம்பர் 4-ஆம் தேதி அன்று மாலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து டிசம்பர் 5-ஆம் தேதி அன்று மாலை முதல் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீனவர்கள் சார்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை: முன்னதாக, சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பன், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் வெள்ளிக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் பாதுகாப்பு கருதி படகுகளை ராட்சத க்ரேன் மூலம் கரையில் பத்திரமாக வைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: புயல் எச்சரிக்கை: தயார் நிலையில் பேரிடர் குழுக்கள்! மழை பாதிப்பு எச்சரிக்கையுள்ள 8 மாவட்டங்களுக்கு விரைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.