ETV Bharat / state

மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்; இருவரின் வியூகம் என்ன..?

author img

By

Published : Aug 3, 2023, 6:52 AM IST

டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம்
டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம்

ஓபிஎஸ்(OPS) மற்றும் டிடிவி தினகரன்(TTV Dhinakaran) ஆகிய இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத பட்சத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோடநாடு வழக்கை கையில் எடுத்துள்ள ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனின் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆராய்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை: அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தோல்வியடைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கை கோர்த்தார். இறுதி வரை அதிமுகவில் தன்னை பாஜகவினர் இணைத்து விடுவார்கள் என நம்பிய ஓபிஎஸ்க்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த மாதம் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சிறிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அழைப்பு விடுக்க வில்லை. இதனால், இருவரையும் பாஜக கழட்டிவிட்டது என பேசப்பட்டது.

பாஜகவாக எங்களை கைவிடும் வரை நாங்கள் கூட்டணியில்தான் தொடர்கிறோம் என ஓபிஎஸ் கூறியிருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமியிடம் பலமுறை ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை இணைக்க கோரி பாஜக அழுத்தம் கொடுத்தும் அதை அவர் மறுத்துவிட்டார். தொடர்ந்து ஓபிஎஸ்-ஐ கைவிடாமல் இருந்த பாஜகவிற்கு, தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு அவரை கை விடுவதற்கு ஒரு காரணமாக அமைந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்தபடியான கட்சியாக அதிமுக திகழ்கிறது.

இதனால், இருவரையும் இணைக்க கோரி ஒரு அளவுக்கு மேல் பாஜகவால் அழுத்தம் தர முடியவில்லை. எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பே எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் தருவதற்கு ஒரு காரணமாக அமைந்தது. நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியை அரசியல் ரீதியாக எதிர்கொள்வதற்கு கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை கையில் எடுத்தார். எடப்பாடி பழனிசாமிக்கும் கோடநாடு கொலை கொள்ளை வழக்கிற்கும் தொடர்பு இருப்பதாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளையில் ஒருவேளை எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருந்து அதன் மூலம் அவர் சிறை செல்லும் பட்சத்தில் அதிமுகவின் தலைமை பொறுப்பில் அமர்வதே ஓபிஎஸ் தரப்பின் திட்டமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. திமுகவுடன் இணைந்து ஓபிஎஸ் செயல்படுவதாகவும், எடப்பாடி பழனிசாமியை அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்கு திமுகவின் தூண்டுதலின் பெயரிலேயே ஓபிஎஸ் செயல்படுகிறார் எனவும் அச்சாணி இல்லாத வண்டி மூன்று அடி கூட செல்லாது எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியிருந்தார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை விரைவு படுத்த கோரி ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஓபிஎஸ் அணி மற்றும் அமமுகவினர் இணைந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளாக தொண்டர்கள் கலந்து கொண்டனர். தென் மாவட்டங்களில் 12 நாடாளுமன்ற தொகுதிகளில் முக்குலத்தோர் சமுதாய மக்கள் வெற்றியை தீர்மானிக்க கூடிய இடத்தில் உள்ளனர்.

இதை மையமாக வைத்து தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் வெற்றியை தடுப்பதற்காக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காததே தோல்விக்கு காரணம் என டிடிவி தினகரன் கூறியிருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் அழுத்தத்தால் பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இடம்பெறாத சூழல் நிலவுகிறது. இதன் காரணமாகவே நானும், ஓபிஎஸ்ஸும் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம் என டிடிவி தினகரன் கூறியதாக பேசப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஓபிஎஸ்ஸும், டிடிவி தினகரனும் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஓபிஎஸ், டிடிவி தினகரன், பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளை இணைத்து மூன்றாவது அணி அமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். திருச்சியில் நடைபெற்ற மாநாட்டை தொடர்ந்து அடுத்ததாக கோவை அல்லது சேலத்தில் மிகப்பெரிய மாநாட்டை நடத்த ஓபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர். இதில், டிடிவி தினகரனின் அமமுகவும் கலந்து கொள்ள உள்ளது.

இது குறித்து பேசிய அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், "ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் திமுகவை எதிர்த்துதான் போராட்டம் நடத்திருக்க வேண்டும். குற்றவாளிகளை ஜாமீனில் எடுத்து, அவர்களை தப்பிக்க வைத்ததே திமுகதான். தங்களுடைய சுய லாபத்திற்காக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இருவரும் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அது அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஏற்கனவே, இரண்டு கோடி உறுப்பினர்கள் சேர்க்கை என்ற இலக்கை அடைய உள்ளோம். இருவரும் இணைந்து ஒரு சில வாக்குகளை பிரிக்கலாம். ஆனால், அதையும் கடந்து அதிமுக மகத்தான வெற்றி பெறும். இவர்களை நம்பி யாரும் கூட்டணிக்கு செல்ல மாட்டார்கள்" என கூறினார்.

இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் பாபு ஜெயக்குமார், "அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமியை எதிர்கொள்ளவே கோடநாடு வழக்கை ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் கையில் எடுத்துள்ளனர். ஆனால், இது அவர்களுக்கு அரசியல் ரீதியாக உதவுமா என்பது சந்தேகம்தான். தென் மாவட்டங்களில் அதிமுகவை தோற்கடிக்க முயற்சியில் இருவரும் இறங்கியுள்ளனர். இவர்களுக்கும் வேறு வழியில்லை. இருக்கக்கூடிய ஒரே அஸ்திரமான சமுதாய அரசியலை கையில் எடுத்துள்ளனர். மூன்றாவது அணி அமைய வாய்ப்பு குறைவு. அப்படி இவர்கள் தலைமையில் அமைத்தால் அதுவும் திமுகவிற்கு சாதகமாக தான் அமையும்" என கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.