ETV Bharat / state

பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டை பற்றி தெரியுமா.?  மீண்டும் வடமாநிலத்தவரை சாடும் சீமான்..

author img

By

Published : Mar 15, 2023, 5:57 PM IST

பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டை பற்றி தெரியுமா? - மீண்டும் வடமாநிலத்தவரை சாடும் சீமான்!
பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டை பற்றி தெரியுமா? - மீண்டும் வடமாநிலத்தவரை சாடும் சீமான்!

தமிழர்களை சுட்டுக் கொல்லும்போதும், மீனவர்களை சிறைபிடிக்கும்போதும் பிரசாந்த் கிஷோர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: பல்லவன் பேருந்து இல்லத்தில், அகவிலைப்படி (DA) உயர்வு மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு சார்பாக இன்று (மார்ச் 15) போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தேமுதிக, நாம் தமிழர் கட்சி போன்ற அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். மேலும் இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் பற்றி தெரியுமா? தமிழர்களை சுட்டுக் கொல்லும்போதும், மீனவர்களை சிறை பிடிக்கும்போதும் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? பிரஷாந்த் கிஷோர் பீகார் முதலமைச்சருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், நான் என் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு அதிக அளவு வந்த பிறகுதான் குற்றச் சம்பவங்களும், போதைப் பொருள் கலாச்சாரமும் அதிகரித்திருக்கிறது. வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து நான் கவலைப்படுவதில்லை. அதை பொருட்படுத்தவும் இல்லை. வட இந்தியர்கள்தான் தமிழ்நாட்டு இளைஞர்களை தாக்குகிறார்கள். திருப்பூரில் கட்டையை தூக்கிக் கொண்டு தமிழர்களை அடித்தது யார்?” என கூறினார்.

முன்னதாக போராட்டத்தில் பேசிய சீமான், “ஓய்வு பெற்ற போக்குவரத்துத் துறை ஊழியர்கள், அகவிலைப்படி நிறுத்தம் இல்லாமல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடுகிறார்கள். இது நியாயமான கோரிக்கை. எனவே அரசு இதனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அகவிலைப்படியை வழங்க வேண்டும். தொலைவில் இருந்து பார்ப்பவர்கள், ‘உங்களுக்கு வேலையே இல்லை. எல்லாத்துக்கும் போராட்டம் செய்வார்கள்’ என கடந்து செல்வார்கள்.

தங்களுக்கு தேவையானக் கோரிக்கைகளை பிச்சை எடுத்து போராட்டமாக செய்துதான் நிறைவேற்ற வேண்டும் என்பது இயல்பாகி விட்டது. மற்றவர்களுக்கு அவ்வப்போது போராட்டங்கள் என்பதுதான். ஆனால், நம் மக்களுக்கு வாழ்க்கையே போராட்டமாக மாறி இருக்கிறது. மற்ற துறைகளில் உள்ளவர்களுக்கு அனைத்து அகவிலைப்படியும் தரப்படுகிறது. ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மட்டும் அனைத்து சலுகைகளும் நிராகரிக்கப்படுகிறது.

ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என கூறினார்கள். ஆனால் மனுக்களை வாங்கி பூட்டிவிட்டு, சாவியை தொலைத்து விட்டார்கள். தற்போது 600 நாட்கள் ஆகியும் எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை” என தெரிவித்தார்.

முன்னதாக அரசியல் வியூகரான பிரசாந்த கிஷோர், சீமான் பேசிய ஒரு வீடியோவை தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டு, “வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் போலியான வீடியோக்களை பரப்பிய அனைவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இந்தி பேசும் மக்களுக்கு எதிராக பேசும் சீமான் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சீமான் மீது ஈரோடு மாவட்ட காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பேச்சு - சீமான் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.