ETV Bharat / state

"போலீஸ் வைத்து அடக்குமுறை செய்தாலும் சம வேலைக்கு சம ஊதியம் பெறும் வரை போராட்டம் தொடரும்"

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 6:53 PM IST

Updated : Oct 4, 2023, 7:50 PM IST

7வது நாளாக தொடரும் சம ஊதியம்  போராட்டம்
7வது நாளாக தொடரும் சம ஊதியம் போராட்டம்

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி, நடைபெற்று வரும் போராட்டத்தை அரசு காவல்துறையை வைத்து அடக்கினாலும் 'சம வேலைக்கு, சம ஊதியம்' பெறும் வரையில் எங்களின் போராட்டம் தொடரும் என இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

7வது நாளாக தொடரும் சம ஊதியம் போராட்டம்

சென்னை: திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண்- 311-ன் அடிப்படையில், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு, சம ஊதியம்' வழங்க வலியுறுத்தி கடந்த 28ஆம் தேதி முதல் தொடர்ந்து இன்று(அக்.04) 7-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் போராட்டத்தின் போது, நிழல் தவருவதற்காக தார் பாய் கொண்டு பந்தல் அமைத்து அதன் கீழ் இருந்தனர். அதனை நேற்று இரவு காவல்துறையினர் அகற்ற வேண்டும் என கூறியதைத் தொடர்ந்து நிழலுக்காக போடப்பட்டிருந்த தார்ப்பாய்கள் அகற்றப்பட்டது.

தார்ப்பாய்கள் அகற்றப்பட்ட நிலையில், கொளுத்தும் வெயிலிலும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களின் இயக்க போராட்டத்தில், மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 260 ஆசிரியர்களும், களத்தில் 17க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விடுமுறைகளுக்குப்பின் இன்று(அக்.04) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக்கு செல்லவேண்டிய ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லாமல், வகுப்புகளை புறக்கணித்தும், 'எண்ணும் எழுத்தும்' பயிற்சிக்கு செல்லவேண்டிய ஆசிரியர்கள் பயிற்சியை புறக்கணித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மற்ற ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவாக பயிற்சியின் இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். பணிக்கு வராதா ஆசிரியர்கள் குறித்த விவரங்களை, தமிழ்நாடு அரசு பதிவுசெய்தும் வருகிறது. அதன் அடிப்படையில் பணிக்கு வராவிட்டால் சம்பளம் என்ற விதியின் படி, அவர்களுக்கு சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறுகையில், "இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு, சம ஊதியம்' வழங்க வேண்டி 7-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவல்துறையினர் நேற்று (அக்.03) இரவு இந்த இடத்தை விட்டு கலைந்து செல்ல வேண்டும் என கூறினார். நாங்கள் 2016 முதல் இந்த இடத்தில் போராட்டம் நடத்தி வருகின்றோம். இதற்கு முன்னர் 4 முறை போராடி உள்ளோம். கடந்த கால ஆட்சியில் கூட காவல்துறையை வைத்து கலைந்து செல்ல கூறியது கிடையாது. கடுமையான வெயிலுக்கு போட்டிருந்த பந்தல், பேனர் அனைத்தையும் கழற்ற வேண்டும் என காவல்துறையை வைத்து நேற்று (அக்.03) நெருக்கடி கொடுத்தார்கள்.

நாங்கள் அனைத்தையும் கழற்றி விட்டோம். மழையிலும், வெயிலிலும் போராட்டம் தொடர்கிறது. அரசு எத்தனை நெருக்கடி கொடுத்தாலும், கைது செய்து சிறையில் அடைத்தாலும் எங்களின் போராட்டம் தொடரும். எங்களை கொண்டு சென்று கூவம் ஆற்றில் வீசினாலும் போராட்டம் தொடரும். ஆட்சிக்கு வரும்முன் வாக்குறுதி கொடுக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும்.

ஏற்கனவே 14 வருடமாக ஆண்டு தோறும், 10நாட்கள் சம்பளத்தை பிடித்து கொண்டுதான் கொடுக்கின்றனர். இதுவரை வருமான வரி கட்டாதவர்கள் என்று பார்த்தால், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் தான் இருப்போம். எங்களின் ஊதியத்தை பிடித்து அரசை நடத்த வேண்டும் என்றால், நாங்கள் சந்தோஷமாக இருப்போம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருந்தால், 28 ஆம் தேதி முதல் போராட வேண்டி நிலைமை வந்திருக்காது.

பயிற்சியையும் புறக்கணிக்கும் நிலைமை வந்திருக்காது. அரசும் காவல்துறையும் இதைத்தான் விரும்புகிறார்களா? எனத் தெரியவில்லை. போராட்டத்தின் போது ஏதாவது இறப்பு ஏற்பட்டால், அதற்கு அரசும் காவல்துறையும் தான் முழு பொறுப்பு. ஆட்சியில் அமர வைத்தோம். சொன்ன வாக்கை நிறைவு செய்வார்களா என காத்திருக்கிறோம்" என வேதனை தெரிவித்தார்.

இதையும் படிங்க: மீண்டும் குறைந்த சிலிண்டர் விலை..! உஜ்வாலா பயனாளிகளுக்கு தித்திப்பான அறிவிப்பு

Last Updated :Oct 4, 2023, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.