ETV Bharat / state

12,402 இடைநிலை ஆசிரியர்கள் 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி பள்ளி செல்லாமல் புறக்கணிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 6:47 PM IST

எண்ணும் எழுத்துப் பயிற்சி புறக்கணிப்பு
எண்ணும் எழுத்துப் பயிற்சி புறக்கணிப்பு

6-வது நாளாக நீடித்து வரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தையடுத்து, 12 ஆயிரத்து 402 இடைநிலை ஆசிரியர்கள் 'எண்ணும் எழுத்தும்' பயிற்சியை புறக்கணிப்பு செய்துள்ளனர்.

சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்திக் கடந்த செப்-28 ஆம் தேதி முதல் தொடர்ந்து 6வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், முதல் பருவத் தேர்வு முடிவு, இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியையையும், பள்ளிக்குச் செல்வதையும் 12 ஆயிரத்து 402 பேர் புறக்கணித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வரும் எண்ணும் எழுத்தும் பயிற்சி 1 முதல் 3ஆம் வகுப்பு , 4 மற்றும் 5ஆம் வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள், பள்ளியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்து வெளிநடப்பில் ஈடுபட்டனர். 'சம வேலைக்கு, சம ஊதியம்' என்ற ஒற்றைக் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களின், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா-வுடனான இரண்டு முறையும், நேற்று(அக்.03) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடனான பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து களத்தில் போராட்டத்திலிருந்த ஆசிரியர்கள் 'சம வேலைக்கு, சம ஊதியம்' வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காந்தி ஜெயந்தியான நேற்று(அக்.03) இரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண்- 311-ன் படி, 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்குச் சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 1.6.2009 க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்குக் கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 1.6.2009 க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியம் ரூபாய் 8 ஆயிரத்து 370 என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய் 5 ஆயிரத்து 200 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும்போது, கல்வித் துறை உயர் அதிகாரிகளால் மூன்று மாதத்தில் இப்பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. 2009-இல் பணியில் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஓய்வு பெற்று வருகிறார்கள். பணிநியமனம் பெற்று 14 ஆண்டுகளாகக் கடைநிலை ஊழியர்கள் பெறும் ஊதியத்துடன் பொருளாதார நெருக்கடியால் பணிபுரிந்து வருகின்றனர். திமுகவின் தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திக் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். தொடர்ந்து இன்று(அக்.03) 6வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் , முதல் பருவ தேர்வு மற்றும் காலாண்டு விடுமுறை முடிவடைந்து, இன்று(அக்.03) முதல் நடைபெறும் எண்ணும் எழுத்தும் திட்டப் பயிற்சிக்கு, இடைநிலை ஆசிரியர்கள் செல்ல வேண்டாம் என்றும் பள்ளிக்குச் செல்வதைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். போராட்டத்திற்கு வர முடியாத ஆசிரியர்கள், பள்ளிக்குச் செல்லாமல் பயிற்சிக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற எண்ணும் எழுத்தும் பயிற்சியில், 1முதல்3 ஆம் வகுப்பு, 4 மற்றும் 5ஆம் வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் சுமார் 12 ஆயிரத்து 402 பேர், பள்ளியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் மற்றும் வெளிநடப்பில் ஈடுபட்டனர். மேலும் போராட்டக்களத்தில் சுமார் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், செம்பனார்கோவில் ஒன்றிய ஆசிரியர்கள் இன்றைய எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கருப்புப் பட்டை அணிந்து அவர்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நஷ்டத்தை ஏற்படுத்தும் விவசாயக் கருவிகள் ஒப்படைப்பு..! தென்காசியில் கூட்டுறவு சங்கத்தினர் போராட்டம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.