ETV Bharat / state

அனைத்து சார்பதிவாளர்களும் 61A விபரங்களை பதிவேற்ற வேண்டும் - பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

author img

By

Published : Jul 6, 2023, 11:00 AM IST

சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு
சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு

செங்குன்றம் மற்றும் உறையூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட ஆய்வு குறித்த செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: திருச்சி மாவட்டம் உறையூர், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்றைய முன்தினம் (ஜூலை 4) மதியம் முதல் நடைபெற்று வந்த வருமான வரித்துறையினரின் சோதனை சுமார் 20 மணி நேரத்துக்குப் பிறகு நேற்று காலை நிறைவு பெற்றது.

2017 - 2018ஆம் நிதி ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விபரங்களும், தேவையான தகவல்களை நேரில் சரிபார்க்கவும் அதிகாரிகளுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. இவ்விரு அலுவலகங்கள் குறித்தும் கூடுதல் விவரங்கள் வருமான வரித்துறையினரால் அந்தந்த சார்பதிவாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.

இவ்விபரங்கள் விரைவில் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும். மேலும் உரிய காலத்திற்குள் இவ்விவரங்களை பதிவேற்றம் செய்யாத இவ்விரு அலுவலகங்களின் சார்பதிவாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சார்பதிவாளர்களும் 61A விவரங்களை வருமான வரித்துறையின் இணையதளத்தில் உரிய காலத்திற்குள் மேலேற்றம் செய்ய வேண்டுமென கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனை தொடர்பாக பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வருமான வரி சட்டம் பிரிவு 285 BA மற்றும் விதி 114 E-இன்படி ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவடைந்ததும் ரூ.30 லட்சத்திற்கு மேற்பட்ட மதிப்பு கொண்ட விற்பனை ஆவணங்களைப் பொறுத்து விற்பவர், வாங்குபவரின் ஆதார் எண், பான் எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற விவரங்கள் பதிவு அலுவலர்களால் வருமான வரித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இது படிவம் 61A என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விவரங்கள் தவறாமல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை மூலம் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி மேற்கண்ட விபரங்கள் வருடந்தோறும் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் அந்தந்த பதிவு அலுவலரால் வருமான வரித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த நிதியாண்டு முடிவடைந்த இரண்டு மாதத்திற்குள் எந்தெந்த சார்பதிவாளர்கள் இந்த அறிக்கையை பதிவேற்றம் செய்தார்கள் என்ற விவரத்தை பதிவுத்துறை தலைவருக்கு தெரிவிக்கும் நடைமுறை வருமான வரித்துறையால் பின்பற்றப்படாத நிலையில், பதிவேற்றம் செய்யப்படாத விபரங்கள் குறித்து அவ்வப்போது வருமான வரித்துறையால் நினைவூட்டல்கள் பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பப்படும். மேலும் அதன் மீது பதிவுத்துறை தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பதும் வழக்கத்தில் உள்ளது.

வருடாந்திர அறிக்கை மட்டுமல்லாது ரூ.30 லட்சத்திற்கு மேல் மதிப்பு கொண்ட விற்பனை ஆவணங்கள், ரூ.10 லட்சத்திற்கு மேல் மதிப்பு கொண்ட விற்பனை ஆவணங்கள் போன்றவற்றின் விபரங்களும் வருமான வரித்துறையினரால் பதிவுத்துறை தலைவரிடம் அவ்வப்போது கோரப்படும். இந்த விபரங்கள் கணினியில் இருந்து எடுக்கப்பட்டு வழங்கப்படும். இதன் மூலம் சார்பதிவாளர் பதிவேற்றம் செய்த படிவம் 61A-இல் ஏதேனும் விடுபட்டு உள்ளதா என்ற விபரம் வருமான வரித்துறையால் சரிபார்க்கப்படும்.

இவ்வாறு பதிவேற்றம் செய்யத் தேவையான தகவல்களை பதிவு செய்ய முன்பதிவு செய்யும் முன்பே ஆவணதாரர்களிடம் இருந்து பெறும் வகையில் பதிவுத்துறையின் ஸ்டார் 2.0 மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனை ஆவணங்கள் பதிவிற்கு வரும் நிலையில், விற்பவர் மற்றும் வாங்குபவரிடமிருந்து பான் எண் பெறப்படுகிறது. பான் எண் இல்லாதவர்கள் வருமானவரி சட்டத்தின்படி படிவம் 60 அளிக்க வேண்டும்.

இவ்விபரமும் மென்பொருள் வழியே சேகரிக்கப்படுகிறது. மேலும், பதிவு பணிகள் மேற்கொள்ளும்போது விற்பனை செய்பவர் மற்றும் சொத்தினை வாங்குபவர்களின் ஆதார் எண் பெறப்பட்டு, அதனை நிகழ்நேரத்தில் (Real Time) பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதால் பதிவு தொடர்பான தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறைக்கு வழங்கும் வகையில் பதிவுத்துறை மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜூலை 4 அன்று திருச்சி மாவட்டம் உறையூர் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸ் சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றிற்கு வருமான வரித்துறையினர் நேரில் வந்தனர். 2017 - 2018ஆம் நிதி ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விபரங்களும், தேவையான தகவல்களை நேரில் சரிபார்க்கவும் அதிகாரிகளுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

இவ்விரு அலுவலகங்கள் குறித்தும் கூடுதல் விவரங்கள் வருமான வரித்துறையினரால் அந்தந்த சார்பதிவாளர்களிடம் கோரப்பட்டுள்ளது. இவ்விபரங்கள் விரைவில் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும். மேலும் உரிய காலத்திற்குள் இவ்விபரங்களை பதிவேற்றம் செய்யாத இவ்விரு அலுவலகங்களின் சார்பதிவாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சார்பதிவாளர்களும் 61A விவரங்களை வருமான வரித்துறையின் இணையதளத்தில் உரிய காலத்திற்குள் மேலேற்றம் செய்ய வேண்டுமென கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ.2 லட்சம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.