ETV Bharat / state

முருகன், சாந்தன் பாஸ்போர்ட் பெறுவதில் என்ன சிக்கல்? அரசு கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 10:14 PM IST

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன் உள்ளிட்டோர் பாஸ்போர்ட் கோரி இலங்கை துணை தூதரகத்தை அணுகலாம் என வெளிநாட்டவர்களுக்கான மண்டல பதிவுத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்து கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட இலங்கை நாட்டை சேர்ந்த முருகன், சாந்தன் உள்ளிட்டோர் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன், நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக, தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கில், வெளிநாட்டவர்களுக்கான மண்டல பதிவுத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், முருகன், சாந்தன் உள்ளிட்டோரை இலங்கைக்கு அனுப்ப அவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வழங்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் ஏற்கனவே கடந்த 2022ஆம் ஆண்டு கடிதம் அனுப்பியதாகவும், மீண்டும் கடந்த நவம்பர் மாதம் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், நான்கு பேரின் விண்ணப்பங்கள் இலங்கை தூதரகத்தில் நிலுவையில் உள்ளதால், மேற்கொண்டு நான்கு பேரும் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை அணுகலாம் எனவும் கூறப்பட்டது. இதேபோல ஆதார் அட்டை வழங்கக் கோரி சம்பந்தப்பட்ட அமைப்பை முருகன் அணுகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு, ஜனவரி 10ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

இதையும் படிங்க: எண்ணூர் அம்மோனியம் வாயு கசிவு: மீண்டும் ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.