ETV Bharat / state

முதுகலை பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு

author img

By

Published : Aug 11, 2020, 4:52 AM IST

Postgraduate Engineering Studies Counseling held on Online due to corona
Postgraduate Engineering Studies Counseling held on Online due to corona

சென்னை: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு முதுகலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., ஆகிய முதுகலை பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் 2020-21ஆம் கல்வி ஆண்டில் சேர்வதற்கான கலந்தாய்வினை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும்.

இந்தக் கலந்தாய்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

கரோனா தொற்றின் காரணமாக இந்தாண்டு முதுகலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

அதேபோல், பகுதி நேர பி.இ., பி.டெக் படிப்பில் 2020ஆம் கல்வி ஆண்டில் சேர்வதற்கான கலந்தாய்வு கோயம்புத்தூர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வாயிலாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும்.

இரண்டாம் ஆண்டு நேரடி பொறியியல் சேர்க்கையில் பி.இ., பி.டெக்., படிப்பில் 2020 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடத்தப்படும்.

எம்.பி., மற்றும் எம்.சி.ஏ., முதுகலை பட்டப் படிப்பில் 2020ஆம் ஆண்டு மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.

இந்த கல்வி ஆண்டில் கரோனா தொற்றின் காரணமாக உயர் கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தமிழ்நாடு முதுகலை பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வினை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திவந்த நிலையில், இந்தாண்டு கூடுதலாக ஆன்லைன் மூலம் நடத்துவதற்கு உயர் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.