ETV Bharat / state

கிண்டிக்கு ஒரு கேள்வி? - சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

author img

By

Published : Jun 30, 2023, 1:10 PM IST

சென்னை
chennai

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கிண்டிக்கு ஒரு கேள்வி என சென்னை முழுவதும் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை

சென்னை: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை அமைச்சரவையை விட்டு நீக்குவதாக தீடீரென நேற்று இரவு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இதனைத் தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ‘கிண்டிக்கு ஒரு கேள்வி?’ என சென்னை முழுவதும் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘கொலை, கொள்ளை, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் உள்ளிட்ட கடும் குற்ற வழக்குகளை சந்தித்து வரும் 34 மத்திய அமைச்சர்களை பதவியிலிருந்து விலக்கச் சொல்லி டெல்லிக்கு கடிதம் எழுதுவீங்களா கிண்டி?’ என ஆளுநரை கேள்வி கேட்டும், 34 மத்திய அமைச்சர்களை கடுமையாக விமர்சித்தும், தலைநகர் சென்னை முழுவதும் வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை பரபரப்பு போஸ்டரை ஒட்டியுள்ளார்.

சென்னை அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம், அண்ணா அறிவாலயம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை, நந்தனம், பசுமைவழிச் சாலை , கிண்டி கத்திபாரா, சைதாப்பேட்டை நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் போன்ற முக்கிய இடங்களில் இந்த போஸ்டர்கள் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’ஆளுநரை மோடியே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது’ - ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்

முன்னதாக, இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், செந்தில் பாலாஜி அரசு வேலைக்கு பணம் வாங்கியது உள்ளிட்ட பல குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகி, இதன் காரணமாக தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி விசாரணை நடைமுறைகளை தாமதமாக்குவதாகவும், விசாரணையில் தலையீடு செய்வதாகவும் ஆளுநர் மாளிகை குற்றம் சாட்டியுள்ளது. தற்போது அமலாக்கத் துறையால் விசாரிக்கப்படும் வழக்கில் செந்தில் பாலாஜி நீதி விசாரணையில் இருப்பதாகவும் அந்த செய்தியறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இது மட்டுமின்றி அவர் மீது வேறு சில கிரிமினல் வழக்குகளும் மாநில போலீசாரால் விசாரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்ந்தால், சட்ட நடவடிக்கைகளில் தடை ஏற்படுவதோடு, மாநில அரசின் செயல்பாட்டுக்கும் தடை ஏற்படும் என ஆளுநர் மாளிகையின் செய்தியறிக்கை கூறுகிறது. மேற்கண்ட கூறுகளை கவனத்தில் கொண்டு செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்திய தகவலின் படி ஆளுநரின் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அட்டர்னி ஜெனரலின் கருத்தை கேட்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் முதலமைச்சருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் ஆட்சி அமைப்பார் பிரதமர் நரேந்திர மோடி:கொட்டும் மழையில் அண்ணாமலை உரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.