ETV Bharat / state

’ஆளுநரை மோடியே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது’ - ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்

author img

By

Published : Jun 30, 2023, 8:30 AM IST

செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் விவகாரத்தில் அகில இந்திய அளவில் பிரளயத்தை ஏற்படுத்தும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

RS Bharati
ஆர்.எஸ்.பாரதி

செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் விவகாரத்தில் ஆளுநரை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி

வேலூர்: அண்ணா கலையரங்கம் அருகில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மாநகரச் செயலாளரும், வேலூர் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளார் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு ஆளுநர் ரவி திமுக அமைச்சவையில் இருந்த செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். அவ்வாறு செய்ய அவர் யார்? கவர்னர் அல்ல கவர்னரைப் படைத்த ஆண்டவரே வந்தாலும் திமுக ஆட்சியின் மீதோ, ஸ்டாலின் மீதோ ஒன்றும் செய்ய முடியாது.

எந்த அடிப்படையில் இந்த நோட்டீஸை வீட்டுள்ளீர்கள்? நீ யார், அரசாங்கத்தைப் பார்க்கும் ஒரு காவல் நாய். அமைச்சரவையை அமைக்கும் உரிமை எந்த காலகட்டத்திலும் கிடையாது. அமைச்சரவைக்குத்தான் எல்லா அதிகாரமும் உண்டு. ஆளுநருக்கு அதிகாரம் எல்லாம் கிடையாது. அவர் கொடுத்துள்ள நோட்டீஸை நாளை பெற்றுக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் திமுக சட்டபடி வழக்கு தொடுத்து சந்திக்க இருக்கிறோம்.

மணிப்பூரில் பெரிய கலவரம் நடக்கிறது. அதனை உயிரை பணயம் வைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று மக்களை சந்திக்கச் சென்றால், அங்கு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரமும், செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் விவகாரமும் நாளை இந்தியாவில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தும். இந்த ஆளுநரை மோடியே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது. நீதிமன்றம் நினைத்தால்கூட மோடி ஆட்சியை கலைக்கலாம். அந்த நிலை ஏற்படும்" என பேசினார்.

பின்னர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில், "பல்வேறு வழக்குகளை திமுக சந்தித்தது. இந்த வழக்கையும் சந்திப்போம். பதவி நீக்கம் என ஆளுநர் சொன்னது தவறு. அவருக்கு அதிகாரமே கிடையாது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் 2 கவர்னர்களுக்கு கொட்டு வைத்தது.

ஆனால், தமிழ்நாடு கவர்னரும் அதேபோல் செயல்படுகிறார். சட்ட ரீதியாக இதனை சந்திப்போம், இந்தியாவிலே தீர்ப்பைப் பெறுவோம். இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக சுயாட்சியை காப்பாற்றும் வகையில் தீர்ப்பைப் பெறுவோம். அமித்ஷா, மோடி மீதும் 300 எம்பிக்கள் மீதெல்லாம் பல வழக்கு இருக்கிறது. மோடி மீதே குஜராத் கலவர கொலை வழக்கு உள்ளது. அவரே இந்தியாவின் பிரதமராகவில்லையா?

இது போன்ற நோட்டீஸ் வழங்க ஆளுநருக்கு அதிகாரமே இல்லை. உச்ச நீதிமன்றத்தில் ஆதராமிருந்தால் ஆளுநர் அதனை நிருபிக்கட்டும். இதில் முகாந்திரம் மட்டுமே உள்ளது, அதை நிரூபிக்கட்டும். அப்படி பார்த்தால், அமித்ஷா உள்துறை அமைச்சராகி இருக்கக் கூடாதே. ஜெயலலிதா முதலமைச்சரே ஆயிருக்கக் கூடாதே. எடப்பாடி மீது நான் தொடர்ந்த வழக்கிற்கு ஸ்டே வாங்கித்தான் 4 வரும் பணியில் இருந்தார்" என கூறினார்.

இதையும் படிங்க: 'அதிகாரம் இல்லாத ஆளுநர் அறிவிப்பு...?' - மூத்த வழக்கறிஞர்கள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.