ETV Bharat / state

11 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றதாக கூறிய போலீஸ் - நீதிமன்றம் அதிருப்தி!

author img

By

Published : Jul 4, 2023, 1:45 PM IST

Ganja rats
சென்னை

சென்னையில் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 11 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக போலீசார் கூறியதையடுத்து, காவல்துறையினர் குற்றத்தை நிரூபிக்கத் தவறியதாகக் கூறி கஞ்சா வழக்கில் கைதான இருவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.

சென்னை: சென்னையில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி மாட்டாங்குப்பம் பகுதியில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக, ஆந்திராவைச் சேர்ந்த ராஜகோபால் மற்றும் நாகேஸ்வர ராவ் ஆகியோரை மெரினா போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்சா, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக மெரினா போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவில் 100 கிராமை எடுத்து, அதில் 50 கிராம் நீதிமன்றத்திற்கும், 50 கிராம் சோதனை செய்வதற்காக ஆய்வுக் கூடத்திற்கும் அனுப்பியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மீதமிருந்த 21.9 கிலோ கஞ்சாவை, காவல் நிலையத்தில் வைத்திருந்ததாகவும், அதில் 11 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காவல் துறையின் தகவல் மற்றும் குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்களும், குறைபாடுகளும் இருப்பதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. காவல் துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்த இடம் மற்றும் இருவரையும் கைது செய்த இடத்தை தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும், குற்றப்பத்திரிகையில் உள்ளபடி 21.9 கிலோ கஞ்சாவை தாக்கல் செய்யாமல், சிறிய அளவிலான கஞ்சாவை மட்டுமே சமர்ப்பித்துள்ளனர் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் 22 கிலோ கஞ்சா வைத்திருந்தார்கள் என்று நிரூபிக்க போலீசார் தவறிவிட்டதாகக் கூறி நீதிமன்றம் இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

முன்னதாக, சென்னையில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை கோயம்பேட்டில் கஞ்சா விற்பனை செய்ததாக மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான வழக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, போலீசார் 11 கிலோ கஞ்சாவை மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். மீதமிருந்த கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக போலீசார் கூறினர். இதையடுத்து, போலீசார் ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறியதாகக் கூறி, மூன்று பெண்களையும் நீதிமன்றம் விடுவித்தது.

இதையும் படிங்க: 19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக கூறிய போலீஸ் - உ.பியைப் போலவே சென்னையில் ஒரு சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.