ETV Bharat / state

19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக கூறிய போலீஸ் - உ.பியைப் போலவே சென்னையில் ஒரு சம்பவம்!

author img

By

Published : Jan 9, 2023, 2:43 PM IST

Updated : Jan 9, 2023, 4:59 PM IST

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை எலிகள் தின்றதாக காவல்துறை கூறியதையடுத்து, கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Police
Police

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு கஞ்சா மறைத்து வைத்திருந்து விற்றதாக சேலத்தைச் சேர்ந்த கல்பனா மற்றும் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த குமாரி, நாகமணி ஆகிய மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததாக கோயம்பேடு போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கு போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று பெண்களிடமிருந்து பறிமுதல் செய்ததாக கூறப்படும் 30 கிலோ கஞ்சாவில், 11 கிலோவை மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையிலும், குற்ற பத்திரிக்கையிலும் பறிமுதல் செய்தது 30 கிலோ என குறிப்பிட்டிருக்க, நீதிமன்றத்தில் சமர்பித்த போதை பொருளில் 19 கிலோ கஞ்சா குறைந்தது எப்படி? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதற்கு, காவல்துறை சார்பில், குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு காவல் நிலையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், காவல் நிலைய கட்டிடம் பழுதடைந்து, பாதுகாப்பு இல்லாமல் இருந்ததால் மழையால் பாதிக்கப்பட்டும், எலிகள் தின்றதாலும் அதன் அளவு குறைந்துவிட்டது என்றும் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளனர்.

இந்த பதிலால் அதிருப்தியடைந்த நீதிபதி, இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியதால் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்ற அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா காவல்துறையினர் 2018ஆம் ஆண்டு கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சா கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். அதன் விலை 60 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஷெர்கார் மற்றும் நெடுஞ்சாலை காவல் நிலையங்களின் கிடங்குகளில் சேமித்துவைக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தவறிய மதுரா மாவட்ட போலீசார் 581 கிலோ போதை பொருளையும் எலி தின்றுவிட்டதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோன்ற காரணத்தையே கோயம்பேடு போலீசாரும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆளுநர் ரவி சட்டமன்ற மரபுகளை மீறி உள்ளார் - முதமைச்சர் ஸ்டாலின்

Last Updated :Jan 9, 2023, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.