ETV Bharat / state

சென்னையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை விழுந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 9:12 PM IST

Updated : Sep 29, 2023, 10:33 PM IST

Petrol bunk roof collapse accident in Saidapet Chennai
பெட்ரோல் பங்க் மேற்கூரை விழுந்து விபத்து

Petrol Bunk roof collapse: சென்னையில் இன்று பெய்த கனமழையால் சென்னை சைதாப்பேட்டையில், உள்ள இந்தியன் ஆயில் பங்க்-இன் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் அவ்வப்போது சாலையில் மரங்கள் முறிந்து விழும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று (செப்.29) இரவு 7 மணியளவில் சென்னையில் சில இடங்களில் பலத்த காற்றுடன், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

இதனால் மக்கள் அனைவரும் மழைக்காக ஓரமாக நின்று கொண்டிருந்தனர். அந்த வகையில், சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு அருகே இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்த பங்கில், மழைக்காக ஊழியர்களும், பொதுமக்கள் சிலரும் ஒதுங்கி நின்றுள்ளனர். அப்போது. அந்த பகுதியில், தொடர்ந்து இடி மின்னல், மற்றும் காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்த பெட்ரோல் பங்கின் மேற்கூரை பலத்த சத்ததுடன் அங்கு மழைக்காக நின்றவர்கள் மீது சரிந்து விழுந்தது.

மேற்கூரை சரிந்து விழுந்ததை அடுத்து சாலையில் சென்றவர்கள் உடனடியாக விழுந்து கிடந்த மேற்கூரைக்குள் சிக்கி இருந்த இருவரை மீட்டனர். பின்னர், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து அசோக் நகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்டு பணி வாகனங்கள் விரைந்து வந்து சரிந்து விழுந்த மேற்கூரைக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், கிரேன் உதவியுடன் அந்த மேற்கூரையை அப்புறப்படுத்தி உள்ளே சிக்கி இருக்கும் நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்தில் இருசக்கர வாகனங்கள் பலவும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் மழைக்காக கூரையின் கீழ் நின்ற பெட்ரோல் பங்க் ஊழியர்கள், பொதுமக்கள் என பெண் உள்பட 13 பேர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கந்தசாமி (56) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பெட்ரோல் பங்கில் கடந்த 6 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டவர்களுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த இடத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் நேரில் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துணை மேயர் மகேஷ் குமார், “சென்னை மாநகரம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளின் மேற்கூரைகள் உறுதித் தன்மையுடன் உள்ளதா என்று மாநகராட்சி தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில், பெட்ரோல் பங்க்-இன் உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பெட்ரோல் பங்கிற்கு சென்னை மாநகராட்சி சார்பில் சீல் வைக்கப்படும். அதேபோல், சென்னை மாநகரில் உள்ள பழமையான கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்ட பின்னர், அதனை இடிப்பதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கட்டுப்பாட்டை இழந்த கார்.. பேருந்தின் மீது மோதி கோர விபத்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

Last Updated :Sep 29, 2023, 10:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.