ETV Bharat / state

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: 'கடல்சார் உயிரினங்கள் அழியும்' - கே.பாரதி

author img

By

Published : Jan 25, 2021, 9:28 PM IST

சென்னை: கடல் சார் உயிரினங்களை அழிக்கக்கூடிய திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது குறித்து சிறிய தொகுப்பு...

குடிநீர் திட்டம் குறித்து பேசிய கே.பாரதி
குடிநீர் திட்டம் குறித்து பேசிய கே.பாரதி

சென்னை: பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம், சென்னைவாசிகளுக்கு முழு அளவு குடிநீர் வழங்க, பெருநகர ஏரிகள் தவிர, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த முன்னுரிமை அளித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு, 150 மில்லியன் லிட்டர் தினமும் உற்பத்தி செய்யும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நெம்மேலியில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இருப்பினும் இந்த திட்டத்திற்கு இதுவரை ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்படாத நிலையில், கட்டுமானப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் ஏரிகள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு மையம் மூலம், சென்னை மக்களுக்கு ஒரு நாள் 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதில், 200 மில்லியன் லிட்டர், சென்னையின் புறநகரிலுள்ள மீஞ்சூர், நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு மையத்தின் மூலம் கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

சென்னை நகரத்தில் வெயில் காலங்களில் அடிக்கடி குடிநீர் பஞ்சம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு நெம்மேலியில் மூன்றாவது கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு மையம் ஒன்றை நிறுவலாம் எனத்திட்டம் வகுத்தது. இத்திட்டத்திற்காக 1 கோடியே 33 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் கூடுதலாக 150 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து குடிநீர் வழங்கல் வாரிய அலுவலர் ஒருவர் கூறுகையில், 'இத்திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிக்கான விவரம் விரைவில் அறிவிக்கப்படும். அதனைத்தொடர்ந்து கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும். இத்திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணி 49 கி.மீ., தொலைவிற்கு நெம்மேலியிருந்து பல்லாவரம் வரை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வருட இறுதிக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும்' எனத் தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் வரும் இந்த தண்ணீர், வடசென்னைப் பகுதிக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், 150 மில்லியன் லிட்டர் கொண்ட இத்திட்டம் தென்சென்னை பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படும். இதனிடையே, சமூக ஆர்வலர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தென்னிந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் கே.பாரதி கூறுகையில், "தமிழ்நாட்டில் நிறைய நீர்நிலைகள் உள்ளன. ஆனால், நீரினை தேக்கி வைப்பதற்கான போதுமான வசதிகள் இல்லை. இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத அரசு, கடல் சார் உயிரினங்களை அழிக்கக்கூடிய ஒரு திட்டத்தினை கொண்டு வருவது நியாயமல்ல" எனக் கூறினார். மேலும், போதுமான ஏரிகள், குளங்கள் இல்லாததால், அயல் நாடுகள் இத்திட்டத்தினை அமல்படுத்தி வருகின்றன. ஆனால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இந்த மாதிரியான திட்டங்களை மாநில அரசு கொண்டுவரக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

குடிநீர் திட்டம் குறித்து பேசிய கே.பாரதி

ஏற்கெனவே 2018ஆம் ஆண்டு, இந்த திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இரு நிறுவனங்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவித்த குடிநீர் வழங்கல் வாரியம், தற்போது கூடுதலாக ஒரு நிறுவனத்தை சேர்த்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது. எனினும், ஒப்பந்தப்புள்ளிகள் ஏற்கெனவே திறந்துவிட்டதால், அதற்கு தடை விதிக்கக்கூடாது என்றும், தற்போது புதிய நிறுவனம் ஒன்றும்; இந்த டெண்டரில் கலந்து கொள்ளத்தகுதி இருப்பதைக் கண்டறிந்து, அந்நிறுவனத்தைச் சேர்த்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் நீதிமன்றம் ஒப்பந்தப்புள்ளி அறிவிக்க அனுமதியளித்தது.

இதையும் படிங்க: குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து சாலை மறியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.