சென்னை: யானைகவுனி ஜர்க்காபுரம் வணிகவரித் துறை அலுவலகம் அருகே மாநகராட்சி சார்பில் ஒப்பந்த அடிப்படையில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருகின்றது. இங்குப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து-வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் ஊழியர்கள் கால்வாயில் இறங்கி பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிவு ஏற்பட்டதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்மாஜி (35) என்ற தொழிலாளி மண் சரிவில் சிக்கி மயங்கினார். உடனே ஊழியர்கள் காவல் துறை, தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இந்தத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வண்ணாரப்பேட்டை தீயணைப்புப் படையினர், யானைகவுனி காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு ரஞ்சித்தை மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி ரஞ்சித் மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த யானைக்கவுனி காவல் துறையினர் அரசு ஒப்பந்ததாரர் செந்தூர் முருகனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 9 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு