புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற பாட்டிக்களும் தாத்தாக்களும்!

author img

By

Published : Mar 19, 2023, 4:51 PM IST

Updated : Mar 19, 2023, 5:03 PM IST

சென்னை

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் படித்தவர்களுக்கு இன்று அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 60 வயது மூதாட்டி ஒருவர் கேள்வித்தாளை படித்துக் காண்பித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற பாட்டிக்களும் தாத்தாக்களும்!

சென்னை: இந்தியாவில் கல்வி கற்காமல் உள்ளவர்களுக்கு அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவை கற்பிப்பதற்காக வயது வந்தோர் கல்வித் திட்டம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் மாலை நேரங்களில் வீடுகளின் திண்ணைகளில் வயதானவர்கள் அமர வைக்கப்பட்டு, படித்தவர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. சில ஊர்களில் மின்சார தெரு விளக்கிலும் அமர வைத்து படிக்க வைத்தனர். அனைவருக்கும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னர் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு இல்லாமல் இருக்கின்றனர். இதற்காக ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட வயது வந்தோர் கல்வித்திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தன்னார்வலர்களை கொண்டு தற்போது கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இத்திட்டத்தில் பயின்ற அனைவருக்கும் இன்று(மார்ச்.19) அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடைபெற்றது.

இது குறித்து பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் குப்புசாமி கூறும்போது, "பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் 15 வயதுக்கும் மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு, வாழ்வியல் திறன் ஆகியவை புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுத்தறிவு கற்பிக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அப்போது இத்திட்டத்தில் 4.50 லட்சம் பேரை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 5 லட்சத்து 28 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டு, 28 ஆயிரத்து 848 தன்னார்வலர்கள் மூலம் அவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. இவர்களின் வாழ்வாதாரத்திற்கான வேலை பாதிக்காத வகையில் தினமும் 2 மணி நேரம் நூறு நாள் வேலை நடைபெறும் இடம், நூலகம், பள்ளிகள் மற்றும் வீட்டின் திண்ணைகளிலும் தன்னார்வலர்கள் கல்வி கற்பித்தனர்.

எழுத்தறிவுத் தேர்வு
எழுத்தறிவுத் தேர்வு

தமிழ்நாட்டில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 664 பெண்கள், 1 லட்சத்து 74 ஆயிரத்து 183 ஆண்கள், 153 மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. அவர்களுக்கு தமிழ்நாட்டில் 28 ஆயிரத்து 848 மையங்களில் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் கண்காணிப்பில் இன்று தேர்வு நடத்தப்பட்டது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியல் நடைபெற்ற தேர்வை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அதிகாரி குல்தீப் நேரில் ஆய்வு செய்தார். மாவட்டங்களிலும் வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் படித்தவர்கள் இன்று ஆர்வத்துடன் தேர்வு எழுதினர். தேர்வு மையத்தில் 60 வயது மூதாட்டி ஒருவர் அடிப்படை எழுத்தறிவை கற்றுக் கொண்டு கேள்வித்தாளை வேகமாக படித்துக் காண்பித்துள்ளார்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'புதிய பாரதம் எழுத்திறவு திட்டத்தில் 5 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு கல்வி' - அதிகாரி குப்புசாமி தகவல்

Last Updated :Mar 19, 2023, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.