ETV Bharat / state

தொடர்ந்து சென்னையின் சாலைப்பெயர்களை மாற்றி வரும் மாநகராட்சி - எதிர்க்கும் கவுன்சிலர்கள்

author img

By

Published : Apr 28, 2023, 9:44 PM IST

chennai corporation
சென்னை மாநகராட்சி

சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் 1,000 சதுர அடி அளவில் உள்ள போக்குவரத்து தீவுக்கு, மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் பெயரை சூட்ட மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை: ஏப்ரல் மாதத்திற்கான சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் 1,000 சதுர அடி அளவில் உள்ள போக்குவரத்து தீவுக்கு கே.பாலச்சந்தர் சதுக்கம் அல்லது கே.பாலச்சந்தர் ரவுண்டானா அல்லது கே. பாலச்சந்தர் போக்குவரத்து தீவு என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே அவ்வை சண்முகம் சாலைக்கு வி.பி.ராமன் பெயரும், மந்தைவெளியில் மேற்கு வட்ட சாலைக்கு பாடகர் டி.எம்.செளந்தரராஜன் பெயரும் சூட்டப்பட்டிருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் சட்ட விதிகள் திருத்தத்தினால் சென்னை மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளின் உரிமைகள் பறிபோவதாக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். மேலும் சட்டவிதிகள் திருத்தத்தில் சென்னை மாநகராட்சிக்கு விலக்கு அளிக்க முதலமைச்சருக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் ராஜசேகர், "நகராட்சி நிர்வாக சட்ட விதிகள் திருத்தத்தினால், சென்னை மாநகராட்சியின் மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் என அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் மற்றும் உரிமைகளில் பாதிப்பு ஏற்படுகிறது. வார்டுகளில் திட்டங்கள் செயலாக்கத்தின் நிதி உச்ச வரம்பு குறைக்கப்பட்டுள்ளதும், ரூ.3 கோடி வரையிலான பணிகளுக்கு மாமன்றத்தின் ஒப்புதல் இன்றி ஆணையரே பணிகளை மேற்கொள்ள வழிவகுக்கும் திருத்தங்களாலும், மக்கள் பிரதிநிதிகளின் உரிமைகள் பறிபோகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு நகராட்சி நிர்வாக சட்ட விதிகள் திருத்தம் குறித்த எதிர்மறை கருத்துகளை முதலமைச்சர் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் சென்னை மாநகராட்சிக்கு விலக்கு அளிக்க வேண்டும்" என்றார்.

பின்னர் இச்சட்ட விதிகள் திருத்தத்தை ஏற்க மாட்டோம் என காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். இதுதொடர்பாக முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என மேயர் பிரியா உறுதியளித்தார்.

இதையும் படிங்க: மாநகராட்சிக் கூட்டத்தில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கி வீசப்பட்ட அதிமுக கவுன்சிலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.