ETV Bharat / state

அமைச்சரிடம் குறையை சுட்டிக்காட்ட வந்த பெண்ணை பேசவிடாமல் தடுத்த எம்.பி.!

author img

By

Published : Nov 7, 2022, 4:55 PM IST

அமைச்சரிடம் குறையை சுட்டிக் காட்ட வந்த பெண்ணை பேச விடாமல் தடுத்த எம்பி
அமைச்சரிடம் குறையை சுட்டிக் காட்ட வந்த பெண்ணை பேச விடாமல் தடுத்த எம்பி

அமைச்சரிடம் குறையை சுட்டிக்காட்ட வந்த பெண்ணிடம் "என்னம்மா நீயே பேசிகிட்டு இருக்க சும்மா இரும்மா” என எம்.பி., அதட்டி பேச விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்லாவரம் ரேடியல் சாலையில் நடந்து வரும் பொத்தேரி முதல் கீழ்கட்டளை ஏரி வரையிலான மழைநீர் வடிகால்வாய் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அலுவலர்களுடன் வந்து பார்வையிட்டார்.

பின்னர் தாம்பரம் ஐ.ஏ.எப்.சாலையில் அகரம் தென் முதல் ஐ.ஏ.எப்.கேட் வரையிலான மழைநீர் வடிகால் பணியை பார்வையிட்டு பின்னர் டிடிகே நகர், வாணியங்குளம் பகுதிக்கு ஆய்வு செய்ய அமைச்சர் நேரு சென்றார். உடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இருந்தனர்.

அப்போது அலுவலர்கள் அமைச்சர் நேருவிடம் இந்தப்பகுதிகளில் பொழியும் மழைநீர், இந்த கால்வாய் வழியாக செல்வது குறித்து விளக்கப்படம் காட்டி சொல்லிக்கொண்டிருந்தனர்.

அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, இதில் செல்லும் மழைநீர் எங்கு வெளியேறும் என்று அலுவலர்களிடம் கேட்டார். அதற்கு அலுவலர்கள் பதிலளிக்கும் முன்பு அந்த பகுதியைச்சேர்ந்த ஆனந்தி என்ற பெண், அந்த மழைநீரெல்லாம் பின்னால் உள்ள காலி இடத்தில் தான் செல்லும் என தடாலடியாக அமைச்சர் நேரு முன்னிலையிலேயே போட்டுடைத்தார்.

அந்நிலையில், ஆடிப்போன டி.ஆர்.பாலு, 'என்னம்மா நீயே பேசிகிட்டு இருக்கா... இரும்மா' என அதட்டலாக சொல்ல, அதற்கு அந்த பெண்மணியோ கொஞ்சம் கூட அசராமல் 'இருங்க ஒரு நிமிஷம்' எனக்கூறிவிட்டு, 'இதைப் பாருங்க’ என சொல்லி தன்னுடைய செல்போனில் இருக்கும் புகைப்படங்களை அமைச்சரிடம் காண்பிக்க முற்பட்டார்.

உடனே டி.ஆர்.பாலுவோ 'அதனை நீங்க பார்க்காதீங்க' எனக் கூறி அமைச்சரின் கையை பிடித்து இழுத்துக் கொண்டார். என்ன ஆனாலும் போட்டோவை காட்டியே தீருவேன் என அப்பெண் 'முந்தைய மழையில் நீங்கள் நிற்கும் இடத்தில் மழை நீர் தேங்கிய புகைப்படங்களை பாருங்கள்' என காண்பித்தார்.

அதன்பின் அந்தப்பெண் அந்த மழை நீர் தேங்கிய படத்தையும், ஏன் தூர்வாரப்பட்ட படத்தையும் போடவில்லை என கேள்வி எழுப்பினார். அமைச்சரோ என்ன பதிலளிப்பது என தெரியாமல் நிற்க, அதனைப்புரிந்து கொண்ட டி.ஆர்.பாலு ’என்ன பண்ணுவது?’ என அப்பெண்ணை பார்த்து கேட்டார்.

அதற்கு பின்னர் பொறியாளர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்து அங்கிருந்து அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.

குறையை சுட்டிக் காட்ட வந்த பெண்ணிடம் "என்னம்மா நீயே பேசிகிட்டு இருக்க... சும்மா இரும்மா" என அதட்டிய எம்.பி., அமைச்சரிடம் பேச விடாமல் தடுத்ததால் பரபரப்பு

நாடாளுமன்ற உறுப்பினரே பொதுமக்களில் ஒருவர் அமைச்சரை சந்தித்து தங்கள் பகுதி குறைகளை சொல்ல வரும் போது, அதை இடைமறித்த சம்பவம் அனைவரின் மத்தியிலும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 10,11,12ஆம் வகுப்பு பொதுதேர்வு அட்டவணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.