ETV Bharat / state

கரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டினால் மாஸ்க் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Apr 12, 2023, 5:01 PM IST

கரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டினால் முகக்கவசம் கட்டாயம்- அமைச்சர் மா.சு
கரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டினால் முகக்கவசம் கட்டாயம்- அமைச்சர் மா.சு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஆயிரமாக மாறும் போது பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: இந்திய மருத்துவத் துறையின் மூலம் யுனானி மருத்துவக் கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள யுனானி முதுகலை படிப்புக்கு தேர்வானவர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சேர்க்கை ஆணைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "யுனானி மருத்துவம் மத்திய ஆசிய நாடுகளில் இருந்து இந்திய நாட்டுக்கு வந்தது. சித்த, ஆயுர்வேதம் என்று பல்வேறு இந்திய மருத்துவமும் உள்ளது. 1979 ஆம் ஆண்டு யுனானி மருத்துவத்திற்கு தனி கல்லூரி தொடங்கப்பட்ட போது 26 பேர் தான் இளங்கலை படிப்பில் இருந்தனர். 2016 க்கு பின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் மட்டும் தான் தனியார் மற்றும் அரசு சேர்ந்த யுனானி கல்லூரி உள்ளது.

இங்கு இளங்கலை யுனானி மருத்துவம் படித்த மாணவர்கள் பட்ட மேற்படிப்பு படிக்க பல்வேறு மாநிலங்கள் செல்ல வேண்டி இருந்தது. அதனால் இந்திய மருத்துவ தேசிய ஆணையத்தை அணுகி நீண்ட போராட்டத்திற்கு பிறகு இரண்டு பாட பிரிவுகளில் 7 மாணவர்களை சேர்க்க அனுமதி பெறப்பட்டுள்ளது. பொது மருத்துவம், சிறப்பு சிகிச்சை பிரிவு என்ற பாடப் பிரிவுக்கு 7 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

6 பேர் மாநில ஒதுக்கீட்டிலும், ஒருவர் தேசிய ஒதுக்கீட்டிலும் சேர்ந்துள்ளனர். இந்த அங்கீகாரம் இந்திய மருத்துவத் துறை சிறப்பு மிக்கது. சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு மாதவரம் பால் பண்ணையில் 25 ஏக்கர் நிலப்பரப்பு தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைகழக நிதியுடன் உள்ளது. சித்த மருத்துவத்திற்கு என அண்ணாநகரில் அலுவலகம் தயார் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் சித்த மருத்துவத்திற்கு தனி பல்கலைகழகம் கொண்டு வர வேண்டும் என சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா குறித்து ஆளுநர் கேள்வி எழுப்பி இருந்தார். அதில், நீட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்களா உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இருந்தார்.

அதற்கு செப்டம்பர் 17 ஆம் தேதி பதிலும் அனுப்பப்பட்டது. பதில் அனுப்பி 6 மாதம் ஆகியும் மசோதா கிடப்பில் உள்ளது. இதை நீண்ட நாட்கள் கிடப்பில் வைத்து இருப்பது சித்த மருத்துவத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரானது என்றார். மேலும், சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுமதி அளிக்க ஆளுநர் கால தாமதப்படுத்தி வருவது அதற்கு உரிய அங்கீகாரத்தை அளிக்க மறுப்பதாக பார்க்கப்படுகிறது" என்று கூறினார்.

மேலும்,"ஆயுஷ் அமைச்சகத்தின் பெயரில் உள்ள (AYUSH) என்ற எழுத்துக்களில் A- ஆயிர்வேதம், Y - யோகா, U - யுனானி, S - சித்தா , H - ஹோமியோபதி என்று இருந்தது. S என்பதற்கு சித்தா என்று தான் இருந்தது. ஆனால் அதனை சவாரிபா என்ற மருத்துவ முறையை குறிப்பதாக தெரிவித்தனர். பின்னர் அதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து நேரில் சென்று மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் விளக்கம் அளித்த பின்னர், கூடுதலாக S என்ற எழுத்து சேர்க்கப்பட்டு AYUSSH என்று மாற்றி அமைக்கப்பட்டது.

முகக்கவசம் கட்டாயமாவது எப்போது?

தமிழகத்தில் கரோனாவின் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் படுக்கை வசதிகள், தேவையான மருந்துகள், உபகரணங்களை வேகமாக அதிகரிக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்தும் கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றின் தாக்கம் 300 லிருந்து 400 ஆக அதிகரித்து உள்ளது. மிதமான பாதிப்பு தான் உள்ளது.

தீவிரமான பாதிப்பு ஏதும் இல்லை. மற்ற மாநிலங்களில் கரோனா தொற்றின் தாக்கமானது வேகமாக அதிகரிக்கின்றது தமிழகத்தை பொறுத்தவரை படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தற்போது தேவையான படுக்கை வசதிகள் ஆக்ஸிஜன் மருந்துகள் ஆகிய அனைத்தும் கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டும் போது தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தல் படி முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும்" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு கருத்து கூற நிர்மல்குமாருக்கு தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.