ETV Bharat / state

“சிறிய அளவில் மழைநீர் தேங்கினாலும் மக்கள் புகார் அளிக்கின்றனர்” - அமைச்சர் கே.என்.நேரு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 8:07 PM IST

Minister KN nehru press meet
மழைநீர் வடிகால் பணிகளை குறித்து கே.என்.நேரு

Minister KN nehru press meet: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தாமதமாகிறது என்றும், இன்னும் 6 நாட்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிக்கப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை: பெரம்பூர் காமராஜர் நகரில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற சுகாதார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைத்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "சென்னையில் 50 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தாமதமாகிறது. இன்னும் 6 நாட்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிக்கப்படும்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். தூர்வாரும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது. எவ்வளவு பெரிய மழை வந்தாலும் மக்கள் பாதிப்பு அடையாத அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்படும். அடையாறு முகத்துவாரத்தை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறிய அளவில் மழை நீர் தேங்கினாலும் மக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கின்றனர். அதிகளவில் தண்ணீர் தேங்கியதை பொறுத்துக்கொண்ட மக்கள், சிறிய மழையை பொறுத்துக்கொண்டால் இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின் சென்னை, சிங்காரச் சென்னையாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "சென்னையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைகள் மேம்படுத்துவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர் மழை பெய்வதால் சாலைப் பணிகளை மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. சென்னையில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதால், சம்பந்தப்பட்ட துறையிடம் தடையில்லா சான்று பெற்று பணிகள் முடிக்க தாமதம் ஆகிறது.

எனவே, பருவமழை முடியும் வரை புதிதாக எந்த ஒரு பணிகளையும் தொடங்கக் கூடாது என உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நீர்நிலைகளில் போதிய நீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலும் நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

எனவே, சென்னை மற்றும் தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு, பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை. நெம்மேலி நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம், 15 நாட்களில் முதலமைச்சரால் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது" என தெரிவித்தார்.

பின்னர் சென்னை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "மாநகராட்சி ஆணையரும் மனிதர்தான். அவருக்கு காய்ச்சல் ஏற்படுவது வழக்கம்தான். சென்னை மட்டும் இல்லாமல், அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க: “அதிமுக ஆட்சிக் காலத்தின் மருத்துவ உதவிகள் கிடைப்பதில்லை என புகார் அளிக்கின்றனர்” - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.