ETV Bharat / state

“அதிமுக ஆட்சிக் காலத்தின் மருத்துவ உதவிகள் கிடைப்பதில்லை என புகார் அளிக்கின்றனர்” - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 7:04 PM IST

Etv Bharat
Etv Bharat

Former Minister C.Vijayabaskar: டெங்கு பரவலைக் குறைக்க சுகாதாரத் துறையுடன் இணைந்து மற்ற துறைகளும் களப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் தெற்கு மாவட்டச் செயலாளர் வைரமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "தற்போது டெங்கு அதிகரித்து வருவதால், சுகாதாரத்துறையோடு இணைந்து கள ஆய்வுகளை அனைத்து துறைகளும் செய்து, காய்ச்சல் கண்காணிப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று நானும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சுட்டிக் காட்டிய பிறகுதான் தற்போது அரசு ஆயிரம் முகாம்கள் தினந்தோறும் நடத்துவதற்கு முடிவு எடுத்துள்ளது.

சுகாதாரத்துறையுடன் இணைந்து, நகராட்சித் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட துறைகள் அனைத்தும் இணைந்து களப்பணியில் ஈடுபட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாவட்டங்கள்தோறும் டெங்கு விழிப்புணர்வு கண்காணிப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு என்று சிறப்பு பிரிவு தொடங்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும், "கடந்த ஆட்சிக் காலத்தில் டெங்கு, கரோனா போன்ற நோய் பரவல் காலத்தின்போது பாதிக்கப்பட்டவர்கள், பழைய நோயாளிகள், புதிய நோயாளிகள் என கணக்கெடுத்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தோமோ, அதேபோல நடவடிக்கைகள் எடுக்கத்தான் இந்த அரசிடம் வலியுறுத்துகிறோம்.

கடந்த ஆட்சியில் இந்த பணிகள் சிறப்பாக நடைபெற்றது. தற்போதும் அதே மருத்துவர்கள், அதே செவிலியர்கள், அதே அதிகாரிகள்தான் பணியாற்றி வருகின்றனர். ஆனால், தலைமைதான் சரியாக இருக்க வேண்டும். அதற்கான ஆலோசனையாகத்தான் கூறுகிறோம். அதை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "கர்ப்பிணி தாய்மார்களுக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் இரண்டாவது மாதம் மற்றும் நான்காவது மாதத்தில் வழங்கக்கூடிய நியூட்ரிஷியன் கிட் கிடைக்கவில்லை என்ற புகார்கள் வந்துள்ளது. அதேபோன்று, பிரசவத்துக்குப் பிறகு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவி கிடைக்கப் பெறாமல், தாய்மார்கள் அவதிப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளது. உடனடியாக அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.

தொடர் கண்காணிப்பில் சுகாதாரத்துறையை அரசு வைத்திருக்க வேண்டும். மேலும், டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். அப்பொழுதுதான் அது விரைவாக பொதுமக்களைச் சென்றடையும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: காலாண்டுத் தேர்வு விடுமுறை; கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.