ETV Bharat / state

Maaveeran: கட்சி கொடியால் படத்துக்கு வந்த சிக்கல்... பொறுப்புத்துறப்பு போடச்சொன்ன நீதிபதி!

author img

By

Published : Jul 12, 2023, 7:48 PM IST

chennai highcourt
40 வினாடிகளுக்கு பொறுப்புத் துறப்பை போட வேண்டும்

மாவீரன் படத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்படவில்லை என 40 விநாடிகளுக்கு பொறுப்புத் துறப்பை (Disclaimer) போட்ட பின்னரே திரையரங்குகளில் வெளியிட வேண்டுமென படத் தயாரிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: 'மாவீரன்' திரைப்படம் 60 கோடி ரூபாய் செலவில், நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை மறுதினம் (ஜூலை 14) திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்திற்குத் தடை விதிக்கக்கோரி, இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் வழக்குத் தொடர்ந்து உள்ளார்.

இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ள மிஸ்கின் வரக்கூடிய காட்சிகளில் அவர் சார்ந்துள்ள கட்சியின் கொடியாக, தங்களது இந்திய ஜனநாயக கட்சியின் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதால், அந்த காட்சிகளை நீக்கும் வரை படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திய ஜனநாயக கட்சி தரப்பில் வழக்கறிஞர் வெங்கடேசன் ஆஜராகி, சிகப்பு - வெள்ளை - சிகப்பு என்ற வண்ண அடுக்குகளில் உள்ள தங்கள் கட்சியின் கொடியைப் படத்தில் பயன்படுத்தி உள்ளதாகவும், கொடியாக மட்டுமல்லாமல் படத்தில் வரக்கூடிய கட்சியினர் அணியும் வேஷ்டி மற்றும் துண்டு ஆகியவற்றிலும் கட்சியின் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும், இப்படத்தில் வரும் எதிர்மறையான கதாப்பாத்திரத்தில் கட்சியின் கொடி பயன்படுத்தப்படுவதால், கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதுடன், பொதுமக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை விதைப்பதாக அமைந்துவிடும் என்பதால், அந்த வண்ணங்களை மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும், அவற்றை மாற்றம் செய்யாமல் படத்தை வெளியிடக் கூடாது என தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வி.வெங்கடேசன் வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து சாந்தி டாக்கீஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, படத்தில் இடம்பெறுவது இந்திய ஜனநாயக கட்சியின் கொடியைப் போன்றது இல்லை என்றும், இளம் காக்கி - மஞ்சள் - இளம் காக்கி என்கிற அடுக்கில்தான் படத்தில் வரும் காட்சிகளில் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையானவை என படத்தின் தொடக்கத்தில் பொறுப்புத் துறப்பு (Disclaimer) வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

இக்காட்சிகளை முழுமையாக மாற்ற 10 முதல் 20 நாட்கள் கால அவகாசம் தேவைப்படும் என்றும், படம் நாளை மறுநாள் 750க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகாவிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் எனவும் விளக்கம் அளித்தார். அப்போது இந்திய ஜனநாயக கட்சி தரப்பு வழக்கறிஞர் வி.வெங்கடேசன் குறுக்கிட்டு, படத்தின் முன்னோட்ட காட்சிகள் குறித்த வீடியோவை பார்க்கும்படி நீதிபதி மஞ்சுளாவிடம் வழங்கினார்.

அதைப் பார்த்த நீதிபதி, எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிடவில்லை என படத்தின் தொடக்கத்தில் 15 விநாடிகள், இடைவேளைக்குப் பிறகு 15 விநாடிகள், படம் முடியும்போது 10 விநாடிகள் என 40 விநாடிகளுக்கு பொறுப்புத் துறப்பை (Disclaimer) வெளியிட வேண்டுமென படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம், இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில் காட்சிகளில் இடம்பெறும் கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓ.டி.டி மற்றும் சாட்டிலைட் சேனலில் வெளியிட வேண்டுமெனவும் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:Krishnagiri - ஐ.டி.பார்க்குக்கு நிலமெடுக்க எதிர்ப்பு - வீடுகளில் கருப்புக்கொடிகளை கட்டி போராடிய மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.