ETV Bharat / state

ஏன் அமைச்சர் விஜய பாஸ்கரை பேச அனுமதிக்கவில்லை - மார்க்சிஸ்ட் கேள்வி!

author img

By

Published : Apr 15, 2020, 1:18 AM IST

balakrishnan
balakrishnan

சென்னை: கரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாக ஏன் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பேச அனுமதிக்கவில்லை என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில், அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கரோனா வைரஸை எதிர்த்து நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். பிரதமர் மோடி, நான்காவது முறையாக மக்களிடம் காணொலி மூலம் உரையாற்றினார். அதில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என அறிவித்தார்.

இது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். பிரதமர் உரை பெரியத் தாக்கத்தை எதும் ஏற்படுத்தவில்லை. பல நல்ல திட்டங்கள், பொருளாதார ரீதியாக பசியில் வாடும் மக்களுக்கு, நிவாரண நிதி போன்ற திட்டங்கள் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால், அவை ஏதுமில்லாமல் ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று அறிவித்தது மிகவும் அதிர்ச்சியும், ஏமாற்றத்தையும் தருகிறது. ஊரடங்கு உத்தரவு மட்டும் அறிவிப்பதற்கு எதற்கு பிரதமர் உரை. மாநில முதலமைச்சர்களே அதை அறிவித்து வருகின்றனர்.

மக்கள் பிரச்னை தீர்வுக்கான உரையை, பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்றால், அனைத்துக் கட்சி கோரியது போல் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

இதன் மூலம் ஏழை, எளிய மக்களின் பொருளாதாரம் சற்று உயரும். மத்திய அரசு, மாநில அரசுக்கான உரிமைகளை தட்டி பறிக்கிறது. ரேபிட் டெஸ்ட் கருவிகளை மாநில அரசு கொள்முதல் செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

கரோனா வைரஸ் போன்ற நெருக்கடி காலத்தில் கூட, மாநில அரசு உரிமையைத் தட்டி பறிக்கிறது கண்டனத்துக்குரியது. கரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் பங்கு இன்றியமையாதது. மருத்துவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை மாநில அரசுகளும் தரமாக வழங்கவில்லை.

இதனால், 6 மருத்துவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தரமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளைக் கேரள அரசு சிறப்பாகச் செய்துள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சருக்குத் தெரியாததா, சுகாதாரத்துறைச் செயலாளருக்கும், முதலமைச்சருக்கும் தெரியப் போகிறது. ஏன் சுகாதாரத் துறை அமைச்சரைப் பேசுவதற்கு அனுமதிப்பது இல்லை" என்றார்.

இதையும் படிங்க: அடுத்த மூன்று மாதங்களுக்கு விலையில்லா ரேஷன் பொருள்கள் - மத்திய அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.