ETV Bharat / state

ரயிலுக்கு காத்திருந்த பெண்ணுக்கு கத்தி குத்து - போதை ஆசாமி கைது!

author img

By

Published : Aug 6, 2023, 10:53 PM IST

பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பயங்கரம்
பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பயங்கரம்

பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பெண்ணை கத்தியால் குத்திய போதை ஆசாமியை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை: செங்கல்பட்டு மக்கான் சந்து, விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (47). இவர்கள் பெருங்களத்தூர் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு புறப்பட்டு உள்ளனர். அப்போது பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகளவில் இருந்ததால் பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

பின்னர் பயணச் சீட்டு வாங்கிக் கொண்டு வரும்போது ஒன்றாவது பிளாட்பாரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மதுபோதையில் தமிழ்செல்வியிடம் பேச்சு கொடுப்பது போல் சென்று தன் கையில் இருந்த கூர்மையான கத்தியால் தமிழ்ச்செல்வியின் வலது கையில் குத்தி கிழித்து விட்டு தப்பி ஓடி உள்ளார்.

இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு வந்த சகப்பயணிகள் கையில் பலத்த காயமடைந்த தமிழ்செல்வியை உடனடியாக ஆட்டோ மூலம் தாம்பரம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு சிகிச்சைப் பெற்ற பின் தமிழ்ச்செல்வி வீடு திரும்பி உள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தாம்பரம் ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து எதற்காக கத்தி குத்து நடந்தது என்பதை பற்றியும், கத்தியால் குத்திய மர்ம நபர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெருங்களத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தொடர் விசாரனை நடத்திய தாம்பரம் இருப்புபாதை காவல் துறையினர், பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பெருங்களத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தாகவும், நேற்று இரவு 10.45 மணி அளவில் ரயில் நிலையத்திற்கு வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற போது, அவர் மறுத்ததால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கையில் குத்திவிட்டு தப்பிச் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த தாம்பரம் ரயில்வே காவல் துறையினர் சுப்பிரமணியனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சமீபகாலமாக, ரயில் நிலையங்களில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை, பெண் பழ வியாபாரி வெட்டிக் கொலை போன்ற கொடூரச் சம்பவங்கள் அரங்கேறி வருவதால் சென்னை மற்றும் புறநகர் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் எனவும் அதிகளவில் ரயில்வே பாதுக்காப்பு படை காவல் துறையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுப்படுத்தப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையின் அடையாளம்... பிராட்வே பேருந்து நிலையத்தின் பரிதாப நிலை..! நடவடிக்கை எடுக்கப்படுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.