ETV Bharat / state

சென்னையின் அடையாளம்... பிராட்வே பேருந்து நிலையத்தின் பரிதாப நிலை..! நடவடிக்கை எடுக்கப்படுமா?

author img

By

Published : Aug 6, 2023, 7:26 PM IST

சென்னையின் முக்கிய பேருந்து நிலையம் கோயம்பேடு அதற்கு அடுத்த நிலையில் பிராட்வே பேருந்து நிலையம் இருக்கிறது. இதை பராமரிக்காமல் ஓட்டுநர்கள், பயணிகள் படும் சீரமமங்களை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

Etv Bharat
Etv Bharat

சென்னை: மதராசப்பட்டினம், மெட்ராஸ் என்று மாரிய காலத்தில் இருந்து, சென்னையின் முக்கிய வணிக பகுதியாக திகழ்ந்து வருகிறது சென்னை பிராட்வே. இது பாரீஸ், பூக்கடை, ஜார்ஜ் டவுன் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1676 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட கறுப்பர் நகரம் முத்தியால் பேட்டை மற்றும் பெத்த நாயக்கன் பேட்டை என்று இரண்டு பகுதிகளை உள்ளடக்கி விரிவடைந்திருந்தது. இந்த இரு பகுதிகளுக்கும் நடுவே அட்டப்பள்ளம் கால்வாய் ஒன்று இருந்தது. இந்த சமயத்தில், பிரிட்டிஷ் வழக்கறிஞர் ஸ்டீபன் போபம், பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி அந்த கால்வாயை மண்ணைக் கொண்டு பள்ளத்தை நிரப்பி சமன் செய்து விரிவான சாலையை அமைத்தார்.

அவர் நினைவாக இந்தச் சாலை "போபமின் பிராட்வே" என்று பெயரிடப்பட்டது. அதற்கு பிறகு சுதந்திர போராட்ட வீரர் டி.பிரகாசத்தின் பெயரால் பிரகாசம் சாலை என பெயர் வைத்து அழைத்தாலும். பிராட்வே என்ற பெயர் மக்கள் மனதில் இன்று வரை நிலைத்துள்ளது. தற்போது பிராட்வே வணிகம், ஆன்மிகம், மருத்துவம், அரசியல் என பல்வேறு துறைகளின் தலைமை பகுதியாக விளங்குகிறது.

குறிப்பாக, சென்னை உயர் நீதிமன்றம், ராஜா அண்ணாமலை மன்றம், கந்த கோட்டம் முருகர் கோயில், காளிகம்பாள் அம்மன் கோயில், ஆர்.பி.ஐ சென்னை தலைமையிடம், பர்மா பஜார், பிளாஸ்டிக் பொருட்களுக்கான நாராயண முதலி தெரு, உடைகளில் மொத்த சந்தையான குடோன் தெரு, தங்க நகைகள், வாசனை திரவியங்கள், பூஜை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்கள் மொத்த விலையில் கிடைக்கும் இடமாக இருந்து வருகிறது.

இந்த பகுதியில் சென்னையின் முக்கிய போக்குவரத்தான பேருந்து நிலையம் எப்போதும் பயணிகளால் பரப்பரப்பாக காணப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிராட்வே பேருந்து நிலையம் தான் முக்கிய பேருந்து நிலையமாக சென்னையில் இயங்கியது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தான், தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, நாகர்கோயில், தென்காசி, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதன் பிறகு, சென்னை வளர்ச்சி அடையும் சமயதில் போக்குவரத்து நெரிசலும் கூடவே வளர்ந்ததால், பிராட்வே பேருந்து நிலையம் கோயம்பேடுக்கு மாற்றப்பட்டது. தற்போது சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு இங்கிருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருநின்றவூர், தாம்பரம், பூந்தமல்லி, மாம்மல்லபுரம், திருப்போரூர், வேளச்சேரி, தண்டையார் பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையமும் அருகில் தான் உள்ளது. இப்படி முக்கிய பகுதியாக இருக்கும் இந்த பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளின்றி இருப்பது பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பயணிகள் ஆகியோர் பல சீரமங்களுக்கு உள்ளாகிறார்கள்.

இது குறித்து பயணி யோகலக்ஷ்மி கூறியதாவது, "நான் ஆவடியில் பூ வியாபரம் செய்கிறேன், பூ வாங்குவதற்காக தினமும் ஆவடியில் இருந்து பிராட்வே-க்கு 71E என்ற பேருந்தில் வருகிறேன். சுமார் 1.30 மணி நேரம் ஆகும். ஆனால், இந்த பேருந்து நிலையத்தில் மூன்று கழிப்பறை தான் இருக்கிறது. அதிலும் சுத்தம் என்பது கேள்வி குறி தான். கட்டண கழிப்பிடத்திலும் நபர் ஒன்றுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

மேலும், இந்த பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதியான குடிநீர் இல்லை, உட்காரும் இருக்கைகளும் பெரும்பாலும் சேதமடைந்துள்ளது. ஆனால், அதில் சிலர் குடித்துவிட்டு படுத்து வீடுவார்கள். இதுமட்டும் இல்லாமல் நடைபாதையில் சிறு சிறு கடைகள் ஆக்கிரமரித்து இருப்பதால் நடக்க இடமில்லாமல் மிகவும் சீரமத்திற்கு உள்ளாகிறோம்" என்றார்.

இது குறித்து பயணி வேல்முருகன் கூறியதாவது, "இந்த பேருந்து நிலையத்தில் நிழற்குடை சரியாக இல்லை, மழை காலத்தில் நிற்க இடம் இருக்காது. சில சமயம், மாநகராட்சி அதிகாரிகள் வருகை தந்து நடைபாதையில் சிறு சிறு கடைகள் அமைத்திருப்பவர்களின் கடையை காலி செய்து வீடுவார்கள். ஓருசில நாட்களில் மீண்டும் கடைகள் முளைக்க தொடங்கி விடும்.

சில சமயத்தில் கழிவுநீர் பேருந்து நிலையத்தில் ஆறாக ஓடும். மழை காலத்தில் தண்ணீர் தேங்கி விடும். இந்த நிலை பல காலமாக நீடிக்கிறது. சென்னையில் பழமையான பேருந்து நிலையத்திற்கு இந்த நிலைமையா?" என வேதனை தெரிவித்தார்.

மேலும் சில பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கூறியதாவது, "சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு, பிராட்வே பேருந்து நிலையத்தில் இருதான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், பேருந்து நிலையத்தில் இருக்கும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதானல் பேருந்தை இயக்குவதற்கு மிக சீரமமாக உள்ளது.

நெரிசல் இருக்கும் நேரத்தில் பயணிகள் முண்டியடித்து ஏறுகையில் இந்த சாலைகளால் மக்கள் அவ்வெப்போது கீழே விழுந்து விடுகிறார்கள். மேலும் ஓட்டுநர்கள் உட்கார அறை இல்லை, குடிப்பதற்கு குடிநீர் இல்லை, எங்களுக்கும் குடிநீர் பிரச்சினை இருக்கிறது. இங்குள்ள ஓட்டல்களில் தான் குடிநீர் பாட்டிலை நிரப்பி எடுத்துச் செல்கிறோம்.

மேலும் இந்த இடத்தில் திருடர்கள் பயம் அதிகமாக இருக்கிறது. அதனால் பேருந்துகளில் எங்கள் உடமைகளை வைத்து கழிவறைக்கு கூட செல்ல சீரமமாக இருக்கிறது" என்றனர். இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டப்போது, "தற்போது மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளிட்டவற்றின் மூலம் பெறப்படும் நிதியை கொண்டு, ரூ.900 கோடி செலவில் 21 மாடிகள் வணிக வளாகத்துடன் கொண்ட பேருந்து நிலையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், கீழ் தளத்தில் 53 மற்றும் கீழ் தரை தளத்தில் 44 பேருந்துகளும், அடுத்த 2 தளங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர பார்கிங் வசதி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மீதம் உள்ள தளங்கள் வணிக வளாகமாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்த பிராட்வே பேருந்து நிலையம் அமைந்துள்ள இடம் முற்றிலும் பெருநகர சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ கட்டுப்பாட்டில் உள்ளது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

இதையும் படிங்க: பயன்பாட்டுக்கே வராத திட்டத்திற்கு வரி விதிக்கும் மாநகராட்சி... திணறும் திருப்பூர் மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.